ரயில் பாதை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருக்கிறது: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 புதிய தொடர்வண்டிப் பாதை திட்டங்களுக்கும் மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். அனைத்துத் திட்டங்களுக்கும் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயித்து, அதற்குள்ளாக செயல்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள புதிய தொடர்வண்டிப்பாதை திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.1158 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தேவைகளை ஒப்பிடும் போது இது குறைவு தான் என்றாலும், நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த தமிழ்நாட்டின் தொடர்வண்டிப் பாதைகளுக்கு புத்துயிரூட்டும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு தொடர்வண்டித் துறையின் பொது மேலாளர் ஆர்.என்.சிங், தொடர்வண்டித்திட்டங்களை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.6,080 கோடியும், ஒட்டுமொத்த தெற்கு தொடர்வண்டித்துறைக்கும் சேர்த்து ரூ.11,313 கோடியும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் தொடர்வண்டித்துறைக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கும் விகிதத்துடன் ஒப்பிடும் போது, இந்த நிதி ஒதுக்கீடு குறைவாகும்.

ஆனாலும், தமிழ்நாட்டில் திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, தருமபுரி - மொரப்பூர், மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி, ஈரோடு - பழனி, ராமேஸ்வரம்- தனுஷ்கோடி ஆகிய 6 புதிய பாதை திட்டங்களுக்கு ரூ.1158 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தான் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஆகும். இவற்றில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டம் தவிர மீதமுள்ள 5 திட்டங்களுக்கும் கடந்த பத்தாண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

அதுமட்டுமின்றி, இவற்றில் திண்டிவனம் - திருவண்ணாமலை, ஈரோடு- பழனி உள்ளிட்ட 5 திட்டங்களை கைவிடுவதாக கடந்த 2019-ஆம் ஆண்டு தொடர்வண்டித்துறை அறிவித்தது. அதைக் கடுமையாக எதிர்த்து, மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வைத்த பெருமை பாமக மட்டும் தான் உண்டு.

2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு மட்டும் தான் ரூ.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள எட்டு திட்டங்களுக்கு தலா ரூ.1000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதைக் கண்டித்து பாமக சார்பில் 16.04.2022 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 21-ஆம் தேதி தெற்கு தொடர்வண்டித்துறை பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து தமிழகத்திற்கான தொடர்வண்டித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பாமக மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது பெருமிதம் அளிக்கிறது.

அதே நேரத்தில் தமிழகத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள 9 புதிய பாதை திட்டங்களை செயல்படுத்த, அவற்றுக்கான தொடக்ககால மதிப்பீடுகளின்படி ரூ.7,910 கோடி தேவை. இந்த மதிப்பு இப்போது ரூ.10,000 கோடியை கடந்திருக்கும். ஆனால், அதில் 11% அளவுக்கு தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக தருமபுரி - மொரப்பூர் புதிய பாதை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.100 கோடி நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அதிக நிதி தேவைப்படும்.

அதுமட்டுமின்றி, சென்னை-மாமல்லபுரம்-கடலூர், அத்திப்பட்டு-புத்தூர், திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி ஆகிய 3 முக்கிய தொடர்வண்டிப்பாதை திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. இந்த 3 திட்டங்களும் பாமகவைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக இருந்தபோது அறிவிக்கப்பட்டவை.

சென்னை-மாமல்லபுரம்-கடலூர் பாதை கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப்பாதை அமைக்கவும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி பாதை சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக இருக்கும். அதனால் இந்தத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

பாமகவைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை இணையமைச்சர்களாக பதவி வகித்த காலத்தில் தான் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் தொடர்வண்டித் திட்டங்கள் கிடைத்தன. 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 14 ஆண்டுகளாக தமிழகத்திற்கு புதிய திட்டங்களும் வரவில்லை; ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதனால், தொடர்வண்டிப்பாதை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 புதிய தொடர்வண்டிப் பாதை திட்டங்களுக்கும் மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். அனைத்துத் திட்டங்களுக்கும் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயித்து, அதற்குள்ளாக செயல்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்