தைப்பூசம் | திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் பஞ்ச திருத்தேரோட்டம்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: திருவிடைமருதூர் பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்க சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி பஞ்ச திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி உற்சவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வரும் கடந்த 18-ம் தேதி விநாயகர் கொடியேற்றமும், 23-ம் தேதி 63 நாயன்மார்கள் வீதியுலாவும், 26-ம் தேதி கொடியேற்றமும், 27-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று அதிகாலை 4.30 மணி முதல் 5.15 மணிக்குள் பஞ்ச மூர்த்திகள் திருத்தேர் எழுந்தருளுதலும், தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமாக சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் ''மகாலிங்கா மகாலிங்கா'' எனக் கோஷமிட்டபடி தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இன்று காலை 10.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் காவிரி ஆற்றுக்கு எழுந்தருளி, அங்கு 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் தைப்பூசத் தீர்த்தவாரியும், இரவு வெள்ளி ரத காட்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE