நலத்திட்டங்களை பெற பொதுமக்கள் அலையக்கூடாது என்றால் சேவை பெறும் உரிமைச் சட்டம் தேவை: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற பொதுமக்கள் அலையக்கூடாது என்றால் சேவை பெறும் உரிமைச் சட்டம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக அரசின் சான்றிதழ்களைப் பெறவும், நலத்திட்ட உதவிகளைப் பெறவும் பொதுமக்களை அலையவிடக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். மக்களுக்கு அரசின் சேவைகள் தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற முதல்வரின் அக்கறை பாராட்டத்தக்கது. இந்தச் சிக்கலுக்கு மிகவும் எளிதான தீர்வு கைவசம் இருக்கும் நிலையில், அதை செயல்படுத்துவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்காதது தான் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின்படி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய மு.க.ஸ்டாலின்,‘‘பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும்’’ என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். மக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் கிடைக்காதது பற்றி முதல்வர் கவலை தெரிவிப்பது இது முதல் முறையல்ல.

சென்னையில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வருவாய் துறையால் வழங்கப்பட வேண்டிய சாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல் போன்றவை பல மாதங்களாக நிலுவையில் இருப்பதாகவும், அவற்றை அடுத்த ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தார். அதன்பின் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என்பதையே முதல்வரின் அண்மைய கருத்து உணர்த்துகிறது.

பொதுமக்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்படாமல் உள்ள சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டும் கூட, பல மாவட்டங்களில் அவை இன்னும் வழங்கப் படவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ் போன்றவை ஒரு சில நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டியவை. ஆனால், அவையே பல மாவட்டங்களில் இன்னும் வழங்கப்படவில்லை என்பதிலிருந்தே, அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் கிடைப்பதில்லை என்பது உறுதி செய்கிறது. இது அரசு எந்திரத்தின் தோல்வியாகும்.

பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஒரே தீர்வு பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவது மட்டும் தான். இந்த சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த 20 மாநிலங்களையும் விட தமிழ்கத்தில் தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது.

தமிழ்கத்தில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் வகை செய்யப்படும். அதனால், அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள்.

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் தமிழ்நாட்டிற்கு கட்டாயம் தேவை; தமிழ்கத்தில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டிருந்தால் அரசு அலுவலகங்களில் ஊழல்கள் கணிசமாக குறைந்திருக்கும் என்று சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இவ்வாறாக பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் சேவை கிடைப்பதையும், அரசு நிர்வாகம் தூய்மை அடைவதையும் உறுதி செய்ய பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற அருமருந்து இருக்கும் நிலையில், அதை செயல்படுத்துவதற்கு அரசு சிறிதும் தயங்கக்கூடாது என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்து. இதற்காக பா.ம.க. கடந்த காலத்தில் பல்வேறு இயக்கங்களையும், போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது.

மக்களுக்கு நன்மைகளை செய்வதிலும், முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம் என்று அரசுத் தரப்பில் பெருமிதம் தெரிவிக்கப்படுகிறது. அது உண்மை என்றால், ஏற்கனவே 20 மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்து செயல்படுத்துவதில், தமிழக அரசுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்?

அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதற்காக பொதுச்சேவை பெறும் உரிமை சட்ட முன்வரைவை மார்ச் மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்