‘இந்து தமிழ் திசை’யின் ‘ஆனந்த ஜோதி’ சார்பில் செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோயிலில் வாழ்வை வளமாக்கும் திருவிளக்கு பூஜை

By செய்திப்பிரிவு

சென்னை: `இந்து தமிழ் திசை'யின் ஆனந்தஜோதி வழங்கும் ‘வாழ்வை வளமாக்கும் திருவிளக்கு பூஜை’பல்வேறு கோயில்களில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கடந்த 31-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் செட்டிபுண்ணியத்தில் உள்ள ஸ்ரீஹயக்ரீவர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சுமார் 400 ஆண்டுகள் பழமைமிக்க இக்கோயிலில் மூலவர் ஸ்ரீதேவநாத சுவாமி. ஆனால், கல்விக்கு அதிபதியாகத் திகழும் ஸ்ரீஹயக்ரீவர்தான் இங்கே விசேஷமான தெய்வமாக போற்றப்படுகிறார்.

புதன், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல ஊர்களிலிருந்தும் இங்கு வந்து, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், ஹயக்ரீவரிடம் பிரார்த்தனை செய்துவிட்டு தேர்வு எழுதச் செல்கிறார்கள்.

இத்தனை பெருமை மிக்க செட்டிபுண்ணியம் ஸ்ரீஹயக்ரீவர் கோயிலில், வாழ்வை வளமாக்கும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடனும் பக்தியுடனும் கலந்துகொண்டனர். முன்னதாக, பெண்கள் எழுதிக் கொடுத்த ‘கடவுளுக்கு ஒரு கடிதம்’ என்கிற பிரார்த்தனை கடிதங்கள், சுவாமியின் திருப்பாதத்தில் வைக்கப்பட்டன.

பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன் செய்து கொடுத்தார். பட்டாச்சார்யர்கள் பாலாஜி, பிரசாத், சம்பத், ரமேஷ் ஆகியோர் பூஜைகளை செய்தனர்.

செங்கல்பட்டு வெற்றி ரியல்ஸ், சிங்கபெருமாள்கோவில் லட்சுமி டிரேடர்ஸ், மறைமலைநகர் விநாயகா டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் ஆகிய நிறுவனங்கள், பூஜைக்குத் தேவையான பொருட்களை வழங்கி உதவின.

‘‘முதல்முறையாக விளக்கு பூஜையில் பங்கேற்கிறேன். மனதுக்கு நிறைவாக உள்ளது. இந்த பூஜையை செய்த ‘இந்து தமிழ் திசை’க்கு நன்றி’’என்று வாசகி மலர்க்கொடி தெரிவித்தார்.

சென்னை மாங்காட்டில் இருந்து வந்திருந்த வாசகி நிர்மலா, ‘‘என் மகனின் பிளஸ்-2 படிப்புக்காக வேண்டிக்கொள்ள வந்தேன். அப்படி வந்த எனக்கு இந்த விளக்கு பூஜையில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. இது எனக்கு கடவுளே தந்த பரிசாக நினைத்து பூரிக்கிறேன்’’என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE