ராஜபாளையம் | கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்: அமைதிப்பேச்சு ரத்தால் அதிருப்தி

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த இரு நாட்களாக நடைபெற இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் காட்டன் சேலை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையேயான 2018 - 2021 ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்து 18 மாதங்களுக்கு மேல் ஆகிறது. அதனால் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் 75 சதவீத கூலி உயர்வுடன் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், 20 சதவீதம் போனஸ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30-ம் தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், விசைத்தறி உரிமையாளர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கம் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் உரிமையாளர் சங்கத்தினர் வராததால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

நேற்று ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வராததால் ரத்து செய்யப்பட்டு வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூலி உயர்வு கேட்டு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இரு நாட்களாக நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது தொழிலாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE