மத்திய பட்ஜெட் 2023-24 | வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு, சிகரெட் மீது 16% கூடுதல் வரி - அன்புமணி வரவேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: "இந்தியாவின் அனைத்து மாநகரங்கள் மற்றும் நகரங்களில் கழிவுநீர் குழாய்களின் அடைப்புகளை அகற்றுவதற்கான பணிகளில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவதை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வரவும், அந்தப் பணிகளில் முழுக்க முழுக்க எந்திரங்களை ஈடுபடுத்தவும் நிதிநிலை அறிக்கையில் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது புரட்சியான செயல் ஆகும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருப்பதும், சிகரெட் மீது 16% கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். அதேநேரத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

வருமானவரி விகிதங்களில் 2017-18ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு தற்போதுள்ள ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலாவது இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறவில்லை. மாறாக நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள பழைய வருமான வரி விகிதங்களின்படியான வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

கடந்த 2020-21ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமானவரி விகிதங்களின்படியான வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு தான் என்றாலும் கூட, மாத ஊதியப் பிரிவினரின் வரிச்சுமையை ஓரளவாவது குறைக்கும் என்ற வகையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

தொடர்வண்டித் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ரூ.2.40 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 8 புதிய தொடர்வண்டித் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்க தொடர்வண்டித்துறை முன்வர வேண்டும். நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அனைத்து ஆதாரங்களின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி ரூ.13.70 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

சிகரெட் மீது 16% கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது; ஆனாலும் இது போதுமானது அல்ல. சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக அவற்றின் மீதான வரியை, அவற்றின் சில்லறை விற்பனை விலையில் 75% என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. அதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இந்தியாவில் இப்போது சிகரெட் மீது 52.7%, பீடி மீது 22%, மெல்லும் புகையிலை மீது 63.8% என்ற அளவில் தான் வரி விதிக்கப்படுகிறது. சிகரெட் மீதான வரி உயர்த்தப்பட்ட பிறகும் கூட உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவை எட்ட முடியாது என்பதால், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீதான வரி விகிதங்களை இன்னும் கடுமையாக உயர்த்துவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.

இந்தியாவின் அனைத்து மாநகரங்கள் மற்றும் நகரங்களில் கழிவுநீர் குழாய்களின் அடைப்புகளை அகற்றுவதற்கான பணிகளில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவதை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வரவும், அந்தப் பணிகளில் முழுக்க முழுக்க எந்திரங்களை ஈடுபடுத்தவும் நிதிநிலை அறிக்கையில் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது புரட்சியான செயல் ஆகும். நாடு முழுவதும் 157 செவிலியர் கல்லூரிகள் புதிதாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் நாட்டிற்கு மிகவும் தேவையான திட்டமாகும்.தொலைக்காட்சி பேணல்களுக்கான உதிரி பாகங்கள் மீதான வரி குறைப்பு, வேளாண் கடன் அளவு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பது ஆகியவையும் வரவேற்கப்பட வேண்டியவை.

அதேநேரத்தில் கிராமப்புற வறுமை ஒழிப்புக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.60,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.89,400 கோடி என்ற நிலையில், அதைவிட 32% குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு தலா 100 நாட்கள் வேலை வழங்க ரூ.2.72 லட்சம் கோடி தேவைப்படும் நிலையில், அதில் 22% மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் போதுமானது அல்ல.

கல்வித் துறைக்கு ரூ.1.128 லட்சம் கோடி, சுகாதாரத்துறைக்கு ரூ.88,956 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது ஓரளவு அதிகம் தான் என்றாலும் கூட, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கு 6 விழுக்காடும், சுகாதாரத்திற்கு 2.5 விழுக்காடும் அரசுத் தரப்பிலிருந்து செலவிடப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு ஆகும். மத்திய அரசின் நிதி பற்றாக்குறை கடந்த ஆண்டின் அளவான 6.4 விழுக்காட்டை விட குறைவாக 5.9% என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவின் நிதி ஒழுங்கை பராமரிக்க இது போதுமானதல்ல. நாட்டின் வருவாயை மக்களை பாதிக்காத வகையில் அதிகரிக்கச் செய்து நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்