மத்திய பட்ஜெட் 2023-24 | தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: "ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் “தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம்”, “இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு”, “மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன்”, “கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது” போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New regime (புதிய முறைக்கு) மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, Old regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது.

மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது. மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.

நகர்ப்புர கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை (Unit cost) உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, ஒன்றிய அரசு இத்திட்டத்தின்கீழ், உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும்.

ஒன்றிய அரசின் திட்டங்கள் Results based financing என்ற ஒரு புதிய வழிமுறைப்படி தொடக்க முயற்சியாக (pilot basis) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே, இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கரோனா பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில், ஒன்றிய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது ஒன்றிய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த ஒன்றிய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்