சென்னை: "2021-ஆம் ஆண்டு பருவமழையின்போது பெற்ற அனுபவத்தைக் கொண்டு, உடனடியாக எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடித்தோம். அதன் பயனை 2022-ஆம் ஆண்டு பருவமழையின்போது கண்கூடாகப் பார்த்தோம். இனிவரும் ஆண்டுகளில், மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயமாக பார்க்க இருக்கிறார்கள்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற மழை வெள்ளக் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர், நம்முடைய அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம். அந்த இரண்டு சாதனைகளைப் படைத்த காரணத்தால், மக்களிடத்திலே நமக்கு மிகப் பெரிய பாராட்டு கிடைத்திருக்கிறது.ஒன்று – கரோனா என்ற கொடிய நோயை எதிர்த்து அதை வென்றோம். அது ஒரு பாராட்டு. இரண்டாவது - மழை, வெள்ளத்தில் இருந்து மக்களைக் காத்தோம், அது இரண்டாவது பாராட்டு. கரோனாவை கட்டுப்படுத்தியதற்குப் பிறகு உடனடியாக ஒரு மிகப்பெரிய மழையை நாம் சந்தித்தோம்.
ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் அதிலும் குறிப்பாக பத்தாண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் எதுவும் செய்யாமல் இருந்துவிட்ட காரணத்தால், அந்த முதல்முறை மழை எந்த அளவிற்குப் பெய்தது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த மழையை, அந்த வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில் நமக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. ஆனால், அந்த நெருக்கடிகளை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வரக்கூடிய காலக்கட்டங்களில் எப்படி நாம் செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டோம்.
அடுத்த மழை வருவதற்கு முன்னால் அல்லது ஒரு வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னால், என்ன மழை பெய்தாலும் அந்த மழையின் காரணமாக தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்ற ஒரு சூழலை உருவாக்குவதற்காக நாம் உறுதி எடுத்துக் கொண்டோம். உறுதி எடுத்துக்கொண்டது மட்டுமல்ல, அந்த உறுதியை எந்த அளவிற்கு நிறைவேற்றிக் காட்டினோம் என்பது நாட்டிற்கும் தெரியும், உங்களுக்கும் நன்றாகத் தெரியும். அதைத்தான் நான் குறிப்பிட்டுச் சொன்னேன், மிகப் பெரிய இரண்டு சாதனைகளை நாம் செய்து முடித்திருக்கிறோம்.
மழை வெள்ளக் காலத்தில் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பது மிகமிக சிரமம். அதில் எனக்கு நிறைய அனுபவம் உண்டு. காரணம், நானும் இந்த மாநகராட்சியின் மேயராக இருந்தவன், ஒரு முறையல்ல, இரண்டு முறை, கிட்டத்தட்ட ஏழாண்டு காலம் இருந்தவன். சென்னையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வார்டும் எனக்குத் தெரியும், ஏன் ஒவ்வொரு தெருவும் எனக்குத் தெரியும். மழை நின்ற பிறகு மட்டுமல்ல, மழை பெய்துகொண்டு இருக்கும்போதே ரெயின்கோட் போட்டுக் கொண்டு, நம்முடைய கமிஷனரை, நம்முடைய அலுவலரை அழைத்துக்கொண்டு, அந்தப் பணிகளையெல்லாம் நேரடியாக பார்த்தவன் நான். இப்போதும் அப்படித்தான். எனக்கு முன்னால் அதிகாரிகளும் - அலுவலர்களும் - தூய்மைப் பணியாளர்களும் இருப்பார்கள். நான் மட்டுமல்ல, அவர்களும் மழையில் நனைந்தபடியே பணியாற்றியவர்கள் தான்.இதுதான் மக்கள் பணி.
2021-ஆம் ஆண்டு நமது அரசு பொறுப்பேற்றதும் பருவமழையின் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் பல முறை முதல்வர் என்ற முறையில் நேரடியாக பார்வையிட்டு, ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, அந்த இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். அதேபோல, அமைச்சர்களும் எந்த அளவிற்கு பணியாற்றினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதையெல்லாம் பார்த்த காரணத்தினால், இனி வரக்கூடிய காலக்கட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து சென்னை மாநகருக்கு நிரந்தரத் தீர்வினை உருவாக்க வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்தோம்.
அப்படி முடிவெடுத்த காரணத்தினால்தான் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை நாம் நியமித்து, ஒரு மேலாண்மைக்குழுவாக அதை உருவாக்கி, அந்தக் குழு சென்னையில் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதிகளை எல்லாம் பார்வையிட்டு, வெள்ளம் பாதித்த இடங்களையெல்லாம் ஆய்வு செய்து, அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களிடத்திலும் ஆய்வு செய்து, அதற்கு பிறகு அறிக்கையை கிட்டத்தட்ட மூன்று கட்டங்களாக நம்முடைய அரசிடம் வழங்கினார்கள்.இந்தக் குழுவின் ஆலோசனைப்படி, நம்முடைய மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்க பல்வேறு திட்டங்களை நாம் உருவாக்கினோம், அதற்காக நிதி ஒதுக்கீடு செய்தோம். பருவமழை துவங்குவதற்கு முன்பே இந்தப் பணிகளை முடிக்க உத்தரவு வழங்கினோம்.
2021-ஆம் ஆண்டு பருவமழையின்போது பெற்ற அனுபவத்தைக் கொண்டு, உடனடியாக நாம் எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடித்தோம். அதன் பயனை 2022-ஆம் ஆண்டு பருவமழையின்போது கண்கூடாகப் பார்த்தோம். இனிவரும் ஆண்டுகளில், மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயமாக பார்க்க இருக்கிறார்கள். இந்த அரசு மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago