சேலம் அருகே பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் கைது

By செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே பட்டியல் இனத்தவரை ஆபாசமாக பேசிய வழக்கில், திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே திருமலைகிரி கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில், சில தினங்களுக்கு முன்னர், அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் கோயிலுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த, அந்த ஊராட்சியின் தலைவரும், திமுக சேலம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மாணிக்கம், அந்த இளைஞர், அவரது தந்தையை கிராம மக்கள் முன்னிலையில், கோயிலுக்குள் புகுந்து ஏன் சண்டையிட்டாய் என்று, ஆபாசமான வார்த்தைகளால் திட்டும் வீடியோ, சமூக ஊடகங்களில் பரவியது.

அதில், மாணிக்கம், அந்த இளைஞரிடம், நீ கோயிலுக்குள் புகுந்து சண்டையிட்டதால், ஊரில் பாதிபேர் கோயிலுக்குள் வர மறுக்கின்றனர். எல்லோரும் ஒண்ணா இருக்கணும், ஊர் நல்லா இருக்கணும்னு நாங்க கஷ்டப்பட்டால், நீ பிரச்சினை பண்ணுகிறாயா? கோயிலைக் கட்டுவதற்கு நீங்கள் பணம் கொடுத்தீர்களா? என்றுகூறி, யார் உன்னை கோயிலுக்குள் நுழையச் சொன்னது என்று கேட்டு, அடிக்க முயற்சி செய்தார். மேலும், ஆபாசமான வார்த்தைகளால் இளைஞரையும், அவரது தந்தையையும் திட்டியுள்ளார்.

கட்சியிலிருந்து சஸ்பென்ட்: இந்த நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, மாணிக்கத்தை திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், சேலம் இரும்பாலை போலீஸார், ஒன்றிய செயலாளர் மாணிக்கத்திடம் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட இளைஞரிடம் புகாரைப் பெற்று, மாணிக்கத்தின் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாணிக்கத்தை போலீஸார் கைது செய்தனர். மேலும், திருமலைகிரி கிராமத்தில் போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு, இதே திருமலைகிரி கிராமத்தில் பழமையான  சைலகிரீஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றின் கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது. அப்போது, கோயிலில் சுவாமியை வழிபடுவது தொடர்பாக, பட்டியலின சமூகத்தினருக்கும் மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை 4 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு, நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதே ஊரில் மீண்டும் கோயிலை மையப்படுத்தி மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறங்காவலர் குழுவில் பட்டியல் இனத்தவரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாவலன் சமூக ஊடகங்களில் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியது: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், வருமானம் ரூ.10 லட்சத்துக்கு குறைவாக உள்ள கோயில்களுக்கு, மாவட்ட அறங்காவலர் குழு அமைக்கப்படும்போது, அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பெண் ஒருவர் கட்டாயம் இடம் பெறுவர். இந்த குழு மூலம் சிறு கோயில்களுக்கு நிர்வாகக் குழு அமைக்கப்படும்.

வருமானம் இல்லாத, தினசரி ஒரு கால பூஜை நடைபெறும் சில கோயில்களில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் பொருளாதார உதவியுடன் பூஜை மற்றும் திருவிழா நடத்தப்படும். அதனால், அந்த கோயிலை நிர்வகிக்கும் உரிமை, அந்த சமூகத்தினரிடம் இருக்கும். எனினும், வழிபாடு என்பது அனைவருக்கும் பொதுவானது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்