பிப்.1-ல் மகா கும்பாபிஷேகம் காணும் கோவை ஸ்ரீநாகசாயி மந்திர்

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோடிக்கணக்கான மக்களுக்கு கண்கண்ட மகானாகவும், தெய்வமாகவும் அருள்பாலிப்பவர் ஷீரடி சாயிபாபா. அவரது பெருமைகளை பட்டிதொட்டி எங்கும் பறைசாற்றும் வகையில், கோவை மேட்டுப்பாளையம் சாலையில், சாயிபாபா காலனியில் அமைந்துள்ளது ‘ஸ்ரீநாகசாயி மந்திர்’ எனும் சாயிபாபா கோயில்.

ஆலயத்துக்குள் நுழைந்ததுமே, மனதில் உள்ள இறுக்கம் நம்மிடமிருந்து விலகிச் சென்றுவிடுகிறது. பரவசத்துடன், பக்தி லயத்தில் பாபாவின் பாதங்களை சரணடைந்து பக்தியில் திளைக்கத் தொடங்குகிறோம். அதன் உச்சமாக, முழு உருவ பளிங்கு சிலையில் காட்சி தரும் பாபாவை கண்டவுடன், நம் மனம் எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைப்பதையும் உணர முடிகிறது.

இந்த ஆலயத்தின் வரலாறு மிகவும் சிறப்பு வாய்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னரே, பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி எழுதிய ‘ஷீரடி - பிரயாண மார்க்கதர்சினி’ எனும் நூலில் இக்கோயில் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த நூலில் கூறப்பட்டுள்ளதாவது.

1942-ம் ஆண்டு கோவை - மேட்டுப்பாளையம் சாலையில், கோவையை சேர்ந்த சில பிரமுகர்கள் நிலம் வாங்கி, தற்காலிகமாக சாயி கோயிலை நிர்மாணித்தனர். ஷீரடி பாபாவின் புகைப்படத்தை அங்கு வைத்து, வியாழன்தோறும் பூஜை, பஜனைகள் நடத்தி வந்தனர்.

அவ்வாறே, 1943-ம் ஆண்டு ஜன.7-ம் தேதி வியாழன் அன்றும் பஜனைக்கு பக்தர்கள் வந்திருந்தனர். மாலை 5.30 மணி அளவில், 4 அடி நீள நாகம் (சர்ப்பம்) ஒன்று பூஜை நடக்கும் இடத்துக்கு வந்து, பாபாவின் படத்துக்கு முன்னால் படமெடுத்து ஆடியது. பக்தர்கள் மறுநாள் காலை வந்து பார்த்தபோதும், அந்த சர்ப்பம் அதே இடத்தில் இருந்துள்ளது.

சாயிபாபாவே சர்ப்ப உருவில் அங்கு வந்திருப்பதாக கருதி மெய்சிலிர்த்த பக்தர்கள், 1,000 சாமந்திப் பூக்களைக் கொண்டு பாபாவுக்கும், சர்ப்பத்துக்கும் அர்ச்சனை செய்துள்ளனர். புஷ்பங்களை தலைமீது ஏற்றுக்கொண்ட சர்ப்பம், அங்கேயே படமெடுத்து நின்றது. இந்நிகழ்வை ஒரு புகைப்படக்காரரும் படம் எடுத்துள்ளார். தொடர்ந்து, கற்பூர தீபாராதனை செய்து, அந்த சர்ப்பத்துக்கு பால் கொடுத்துள்ளனர். 17 மணி நேரத்துக்கு பிறகு சர்ப்பம் அங்கிருந்து சென்றது. இவ்வாறு அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கரதத்தின் சிறப்பு

எந்த சாயிபாபா ஆலயத்திலும் இல்லாத வகையில், முதல்முறையாக தங்கத்தேர் உருவாக்கப்பட்ட பெருமை இக்கோயிலுக்கு உள்ளது. கடந்த 2007-ல் இங்கு தங்கத்தேர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நினைத்துக் கொண்டு, கோயில் வளாகத்தை சுற்றி இந்த தங்கத்தேரை வடம்பிடித்து இழுத்து வந்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஐதீகம். அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில், பிரம்ம தேவன் வாகனத்தை ஓட்ட, பின்னால் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி சாயிபாபா வரும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.

மிகுந்த போட்டி நிலவும் சூழலில், தங்கத் தேர் இழுப்பதை பக்தர்கள் பெரும் பாக்யமாக கருதுகின்றனர். ஒரு சுற்றுக்கு 4 பக்தர்களின் குடும்பத்தினர் தங்கத்தேர் இழுக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு முன்பதிவு செய்பவர்கள், சுமார் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

பிப்.1-ல் கும்பாபிஷேகம்

ஸ்ரீநாகசாயி மந்திர் கோயிலின் 3-வது மகா கும்பாபிஷேகம் வரும் பிப்.1-ம் தேதி நடக்கிறது. அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த 27-ம் தேதி சிவாச்சாரியார்கள் அழைப்புடன் தொடங்கியது. தொடர்ந்து 31-ம் தேதி வரை தினமும் யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனைகள் நடக்கின்றன. பிப்.1-ம் தேதி காலை 9.05 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு நாகசாயி உற்சவமூர்த்தி வீதிஉலாவும், 2-ம் தேதி மாலை 7.45 மணிக்கு தங்கரத பவனியும் நடைபெறுகிறது.

கடந்த 1943-ல் நிறுவப்பட்ட நாகசாயி அறக்கட்டளையால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது. இதன் அறங்காவலர் குழு துணைத் தலைவராக எஸ்.பாலசுப்பிரமணியன், செயலாளராக வழக்கறிஞர் எஸ்.பாலசுப்பிரமணியன், பொருளாளராக என்.சர்வோத்தமன், அறங்காவலர்களாக ஜி.தியாகராஜன், எஸ்.சந்திரசேகர், ஜி.சுகுமார் உள்ளனர்.

துணைத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது:

இக்கோயிலில் கடந்த 1962-ல் ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் முழு உருவ பளிங்கு சிலை அமைக்கப்பட்டது. இச்சிலையை புட்டபர்த்தி சத்ய சாயிபாபா பிரதிஷ்டை செய்தார். புட்டபர்த்திக்கு அடுத்து சாயிபாபாவை அவர் பிரதிஷ்டை செய்த ஒரே கோயில் கோவை நாகசாயி மந்திர்தான். இதை அவரே தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். ஷீரடி சாயிபாபா கோயிலில் கடைபிடிக்கப்படும் பூஜை முறைதான் இங்கும் பின்பற்றப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜனவரியில் நிறுவன தினம் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஷீரடி பாபா சமாதியான ஆயுதபூஜை நாளிலும் விசேஷ பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தினமும் இக்கோயிலுக்கு சராசரியாக 2,500 பேர் வருகின்றனர். வியாழக்கிழமைகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஸ்ரீ ஷீரடி அறக்கட்டளை கேட்டதற்கு இணங்க, கடந்த 2017-ல் சாயிபாபாவின் பாதுகை இங்கு கொண்டு வந்து வைக்கப்பட்டது. அப்போது நடந்த நிகழ்வில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்