ஜி20 பிரதிநிதிகள் மாநாடு; புதுச்சேரியில் இன்று தொடக்கம்: பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள் வருகை

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஜி20 மாநாட்டில் அறிவியல் கூட்டம் தொடங்கிறது. இதையொட்டி, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் புதுவைக்கு நேற்று வந்தனர்.

ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பைஇந்தியா ஏற்றுள்ளது. இந்தியாமுழுவதும் 200 நகரங்களில், பல்வேறு தலைப்புகளில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதன்படி புதுவையில் இன்று (ஜன.30)ஜி20 பிரதிநிதிகள் மாநாடு தொடங்குகிறது.

புதுச்சேரி மரப்பாலத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று(ஜன.30) காலை 9.30 மணிக்கு,ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாகஅறிவியல்-20 மாநாடு நடைபெறுகிறது. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் புதுவையை அடுத்த ஆரோவில்லுக்கு நாளை செல்கின்றனர்.அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் புதுச்சேரிக்கு நேற்று விமானங்களில்வந்தனர். அவர்களை, புதுவைஅரசின் தலைமைச் செயலர் ராஜீவ்வர்மா, ஆட்சியர் வல்லவன் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்று,விடுதிகளில் தங்க வைத்தனர்.

ஸ்வீடன், ஐரோப்பிய நாடுகளில் இருந்து புதுவைக்கு வந்துள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கூறும்போது, "முதல்முறையாக புதுச்சேரி வருகிறோம். பருவநிலை மாற்றம் தொடர்பாக விவாதிக்க உள்ளோம். இதில்முக்கிய முடிவுகள் பரிந்துரைக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்கும் விடுதிகள், விமான நிலையம்,மாநாட்டு அரங்கம் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்கள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மாநாடு நடைபெறும் விடுதியின் முன்பகுதியில் புதுவையின்அடையாளமான ஆயி கட்டிடவடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் ஆயி மண்டபம், பிரதமர் உருவ மணல் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புதுச்சேரி நகரம் பொலிவுபடுத்தப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

ஜி20 அறிவியல் 20 தொடக்கக் கூட்டத்துக்கான இந்தியாவின் தலைவர் டாக்டர் அசுதோஷ் ஷர்மா கூறும்போது, "அறிவியல்- 20 கூட்டத்தில் இந்தியாவில் உள்ள 42 அறிவியல் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இதில் உலகளாவிய சுகாதாரம், பசுமையான எதிர்காலத்துக்குத் தேவையான தூய ஆற்றலைப் பெறுதல், அறிவியலை சமூகம் மற்றும் கலாச்சாரத்துடன் இணைத்தல் குறித்து விவாதிக்கப்படும். விஞ்ஞானத்தின் மூலம் கிடைக்கும் தீர்வுகளை செயல்படுத்த ஒத்துழைக்க உதவும் ஒரு தளத்தை ஜி-20 வழங்குகிறது" என்றார்.

புதுச்சேரியைத் தொடர்ந்து, அகர்தலா (சிக்கிம்), பங்காரம் தீவு(லட்சத்தீவு), போபால் (மத்திய பிரதேசம்) ஆகிய இடங்களில் அறிவியல்-20 கூட்டம் நடைபெறுகிறது. இறுதிக் கூட்டம் கோவையில் (தமிழ்நாடு) நடைபெறுகிறது. அறிவியல்-20 கூட்டத்தில் இந்தியாவில் உள்ள 42 அறிவியல் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE