தருமபுரி: பிரதமர் மோடி குறித்த பிபிசி தொலைக்காட்சி தொடர், இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட பாமக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தருமபுரி வந்தார். நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியது: ''தருமபுரி மாவட்டத்தின் முதன்மைப் பிரச்சினை குடிநீர். அடுத்த பிரச்சினை பாசனத்திட்டங்கள். மனித உடலில் உள்ள எலும்பு, பல் போன்ற பகுதிகளின் வளர்ச்சியையும் வலிமையையும் பாதித்து பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் ப்ளூரோஸிஸ் பாதிப்பு என்பது குடிநீர் மூலம் ஏற்படக் கூடியது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரில் புளூரைடு என்ற நச்சு வேதிப்பொருள் கலந்துள்ளது. இது கலந்த நிலத்தடி நீரை தொடர்ந்து குடிநீராக உட்கொள்ளும்போது ப்ளூரோஸிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டுமென பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட பிறகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் வந்தது. எனினும், இந்த திட்டத்தின் மூலம் இரு மாவட்ட மக்களுக்கும் முழுமையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை.
மாறாக, ஒவ்வொரு கிராமத்திலும் ஒகேனக்கல் குடிநீரையும், உள்ளூர் நிலத்தடி நீரையும் ஒன்றாகக் கலந்தே விநியோகம் செய்கின்றனர். இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். இதேபோல, ஆண்டுதோறும் கனமழை காலங்களில் சுமார் 500 டிஎம்சி உபரிநீர் ஒகேனக்கல் காவிரியாற்றின் வழியாகச் சென்று வீணாகக் கடலில் கலக்கிறது. இதில் ஆண்டுக்கு 3 டிஎம்சி தண்ணீரை நீரேற்றும் திட்டம் மூலம் மாவட்ட நீர்நிலைகளில் நிறைத்து வேளாண் தொழில் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் என தொடர்ந்து கோரி வருகிறோம்.
எனினும், இந்த திட்டம் கிடப்பிலேயே உள்ளது. அத்திக்கடவு-அவிநாசி திட்டம் போன்றதொரு திட்டம் தான் ஒகேனக்கல் உபரிநீர் திட்டம். இந்த திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனே நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். தவறினால், பாமக மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். அதேபோல, தருமபுரி-மொரப்பூர் இணைப்பு ரயில் சாலை திட்டம் 75 ஆண்டு கால கோரிக்கை. இந்த திட்டத்துக்கு ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், மத்திய, மாநில அரசுகளிடையே இந்த திட்டம் தொடர்பாக ஏற்பட்ட சிக்கல் காரணமாக கிடப்பில் விடப்பட்டது.
தற்போது மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வேலைவாய்ப்பு தேடி பல லட்சம் இளையோர் வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டையை உடனே தொடங்க வேண்டும். எண்ணேகொல்புதூர்-தும்பல அள்ளி நீர்ப்பாசன திட்டம் தொடங்கப்பட்ட போதும் ஆட்சி மாற்றத்தால் முடங்கியுள்ளது. இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி நிறைவேற்றிட வேண்டும்.
தொப்பையாறு உபரிநீர் திட்டம், வாணியாறு திட்டம் ஆகியவற்றையும் நிறைவேற்ற வேண்டும். சின்னாறு மூலம் நீர்நிலைகள் பாசனம் பெற உதவும் கால்வாய் தூரடைந்து கிடக்கிறது. இதை பாமக சார்பில் தூர் வார திட்டமிட்டு வருகிறோம். தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து வருவது வேதனை அளிக்கிறது. இதை தருமபுரி மாவட்ட பிரச்சினையாக பார்க்காமல் இந்தியாவின் பிரச்சினையாகக் கருதி இந்த சாலையை விபத்தில்லா சாலையாக சீரமைத்துத் தர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல், இதயவியல் உள்ளிட்ட பிரிவுகளை தொடங்க வேண்டும். சென்னையில், கள்ளச் சாராயத்தை ஒழித்த காவலவர்களுக்கு குடியரசு தினத்தன்று முதலமைச்சர் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார். அதேநாளில் கரூர் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் கடைகளில் சிறப்பான மதுவிற்பனைக்கு காரணமாக இருந்த அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கிறார்.
மதுவை சார்ந்து இயங்குவது தான் திராவிட மாடல் ஆட்சியா? மது சார்ந்து திமுக அரசின் கொள்கை என்ன என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும். போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு 20 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இடைத்தேர்தல்கள் மீது பாமக-வுக்கு நம்பிக்கை இல்லை. இது அவசியமற்றது என்று பாமக கருதுகிறது. எனவேதான், பென்னாகரம் இடைத்தேர்தலுக்குப் பிறகு எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடவில்லை. பிபிசி தொலைக்காட்சி பிரதமர் மோடி குறித்து தயாரித்து வெளியிட்டுள்ள தொடரில் இடம்பெறும் காட்சிகள் தவறானவை என பாஜக கூறுகிறது. எந்த தொடரை உருவாக்கினாலும் அவை இந்திய சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்'' என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago