அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருள் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை

By செய்திப்பிரிவு

மதுரை: அனைத்து மாவட்டங்களிலும் போதைப் பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கலாம் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

மதுரை மாவட்டம் செல்லூர் ஜெயசுதா, ஈச்சம்பட்டி ரஞ்சிதம், வலையன்குளம் சுபாஷ், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அந்தோணி தனராஜ் ஆகியோரை கஞ்சா வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு சார்பில் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதிடுகையில், கடந்த 3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதியப்பட்டு 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பள்ளி, கல்லூரி அமைந்துள்ள பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் போதைப் பொருள் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருட்களை பாதுகாக்க சென்னை, திருச்சி, மதுரை, தேனி, கோவையில் சிறப்பு பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல் நிலையங்களில் உள்ள போதைப் பொருட்களை சிறப்பு பாதுகாப்பு அறைகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மண்டல அளவில் டிஐஜிக்கள் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சென்னை, சேலம், கோவை, விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டையில் போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்துடன் விருதுநகர் மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. விருதுநகரில் இருந்து மதுரை வழியாகவே புதுக்கோட்டைக்கு செல்ல வேண்டும்.

சிறப்பு நீதிமன்றங்கள் அந்தந்த மாவட்டங்களிலிருந்து 100 கி.மீ. சுற்றளவில் இருக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களுக்கும் காவல் நிலையங்களுக்குமான தூரம் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் போலீஸாரால் வழக்கை சரியாக கையாள முடியும். அனைத்து மாவட்டங்களிலும் போதைப் பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கலாம்.

இது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதால் இதற்காக நீதிமன்றம் தனியாக உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை. போதைப் பொருள் வழக்குகளில் டிஜிபி மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படும் என நீதிமன்றம் நம்புகிறது.

மனுதாரர்களுக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால், தற்போதைய ஜாமீன் மனுக்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை. இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE