மாடுகளுக்கு அம்மை நோய் காரணமாக வெறிச்சோடிய திம்மசந்திரம் கால்நடை திருவிழா

By செய்திப்பிரிவு

ஓசூர்: மாடுகளுக்கு அம்மை நோய் தாக்கம் காரணமாக, திம்மசந்திரம் கால்நடை திருவிழாவுக்குக் கால்நடைகள் வரத்து குறைந்தன. இதனால், விவசாயிகள், வியா பாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் மிகவும் பழமையான சப்பளம்மா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் போது, நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் வகையில் நாட்டு மாடுகள் பங்கேற்கும் கால்நடை சந்தை ஒரு வாரம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டில், தை திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, கால்நடை சந்தையும் தொடங்கியது. இச்சந்தைக்கு வழக்கம்போல கர்நாடக, ஆந்திர மாநில விவசாயிகள், வியாபாரிகள் அதிக அளவில் பங்கேற்று கால்நடைகளை வாங்கிச் செல்வார்கள் எனவும், ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், அதற்கு தேவையான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர். ஆனால், கால்நடைகளுக்குப் பரவும் அம்மை நோய் காரணமாகச் சந்தைக்கு வழக்கத்தை விட கால்நடைகள் வருகை குறைந்தன. மேலும், விற்பனையும் சரிவைச் சந்தித்தது.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி முனியப்பா மற்றும் சிலர் கூறியதாவது: மூன்று மாநில மக்கள் கூடும் கால்நடை திருவிழா 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு நடைபெறும் சந்தையில் நல்ல தரமான நாட்டு மாடுகள் கிடைக்கும். மாடுகளை வாங்கவும், விற்கவும் அதிகளவில் விவசாயிகள், வியாபாரிகள் வருவது வழக்கம்.

இங்கு ஒரு ஜோடி மாடுகள் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகும். கரோனாவால் கடந்த இரு ஆண்டுகளாக நடந்த சந்தையில் போதிய அளவு மாடுகள் விற்பனையாகவில்லை. நிகழாண்டில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாகச் சந்தையில் கால்நடைகள் வர்த்தகம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டதால், தற்போது, சந்தையில் மாடுகள் வாங்க வெளியூர் வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் விற்பனை குறைந்துள்ளது. மேலும், நாட்டு மாடுகள் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருவதால், சந்தைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கையும் குறைந்தன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE