அண்ணாமலை குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது: காங். எஸ்.சி. அணி தலைவர் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. அணி தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுள்ள ஆட்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி செயல்பட்டு வருகிறது. 2021-22 பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.4,142 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கல்வி சார்ந்த 33 திட்டங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தபடி, ரூ.45 கோடியில் புதிய மாணவர் விடுதி கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 484 ஆதிதிராவிட மாணவர்கள் பயனடைவர். பட்டியலின, பழங்குடியின மக்களின் நலனை பாதுகாக்க, ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம்’ என்ற தன்னாட்சி அமைப்பை உருவாக்கி சமத்துவம் காண்போம் என்ற முழக்கத்துக்கு செயல் வடிவம் கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலினை மனதாரப் பாராட்டுகிறேன்.

இந்த நடவடிக்கையின் மூலம் தமிழக அரசு பட்டியலின, பழங்குடியின மக்களின் நலனில் எந்த அளவுக்கு அக்கறையோடு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை, ஆதிதிராவிடர் நலனில் அக்கறையில்லாத அரசு என்று குற்றம்சாட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட, காழ்ப்புணர்ச்சி செயலாகும். அவ்வாறு பேசுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பாஜக என்றாலே ஆதிதிராவிடர்களுக்கு எதிரான கட்சி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE