டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் சர்ச்சை: கரூர் ஆட்சியர் விளக்கம்

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட சர்ச்சை தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஊழியர்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்ட பாராட்டு சான்றிதழ்கள் வாசகங்கள் மாற்றப்பட்டு ஊழியர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஜன. 26 தேதி) நடந்த குடியரசு தின விழாவில் அரசு ஊழியர்கள் மற்றும் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியவர்களுக்காக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முகவடிவேல், மேற்பார்வையாளர்கள் எம்.சிவகுமார், ஆறுமுகம், விற்பனையாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாராட்டு சான்றிதழில், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டமையை பாராட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நற்சான்று வழங்கப்படுகிறது என்று இடம்பெற்றிருந்த வாசகங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்கள் அன்றைய தினமே திரும்பப் பெறப்பட்டன.

திரும்பப் பெறப்பட்ட பாராட்டு சான்றிதழ்களில் வாசகங்கள் மாற்றப்பட்டு ஊழியர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, டாஸ்மாக் நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நற்சான்று வழங்கப்படுகிறது என வாசகங்கள் மாற்றப்பட்டு அவர்களுக்கு மீண்டும் பாராட்டு சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் விளக்கம் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சிறப்பாக பணியாற்றிய அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கும் நிகழ்வு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெறும் ஒன்றாகும். இந்த விருதிற்காக ஒவ்வொரு துறையின் தலைமை அலுவலரிடம் பரிந்துரை பட்டியல் காரணத்துடன் பெறப்பட்டு அதிலிருந்து இறுதி பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது.

இந்தாண்டு 74வது குடியரசு தினத்தன்று கரூர் மாவட்டத்தில் 387 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பொதுவாக இவ்விருதுகள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கடைநிலை அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அங்கீகாரம் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர், கிராம உதவியாளர், தூய்மை காவலர், மேல்நிலை தொட்டி பராமரிப்பாளர், சத்துணவு சமையலர், அங்கன்வாடி உதவியாளர், கால்நடை உதவியாளர், மின்சார வாரிய லைன்மேன், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என பல்வேறு தரப்பினருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. மேலும் தன்னார்வ அமைப்புகளை சார்ந்தவர்களுக்கும், சமுதாயத்திற்கு தொண்டாற்றிய சிறந்த நபர்களுக்கும், விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்தவகையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. அத்துறையை சார்ந்த பணியாளர்களுக்கு விருது வழங்குவது இது முதல்முறை அல்ல. பல ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது.

மேலும் பாராட்டு சான்றிதழில் இடம்பெற்ற சொற்கள் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நடையிலேயே தயாரிக்கப்பட்டு பின்னர் இறுதியாக இந்தாண்டு வழங்கப்பட்ட சான்றிதழ் அவர்கள் விரிவான பணியை பாராட்டும் நடையில் இடம்பெற்றது. போலி மதுபான விற்பனையை தடுப்பது, கலப்பட மதுபான விற்பனையை தடுப்பது, அரசு விதிகளைப் பின்பற்றுவது போன்றவை அவர்களுடைய பணிகளின் ஒரு பகுதியாகும். இந்த பணிகளை சிறப்பாக மேற்கொள்வோரை பாராட்டுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதே உண்மை.

சான்று பெற்ற டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தாங்கள் இழிவான தொழில் செய்வது போன்று எழுந்த விமர்சனங்களால் மிகுந்த மனவேதனையில் உள்ளதாக தெரிகிறது. இதை அனைவரும் கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். வரும்காலங்களில் இதுபோன்ற நுட்பமான மற்றும் உணர்வு பூர்வமான விஷயங்கள் கவனமுடன் கையாளப்படும். இறுதியாக டாஸ்மாக் அலுவலர்களுக்கு விருது வழங்குவது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்று மீண்டும் ஒரு முறை இதன் மூலம் தெளிவுப்படுத்தப்படுகிறது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கு ஆட்சியர் விருது, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் படங்களையும், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் துறைவாரியான எண்ணிக்கை விபரம், ஆகியவற்றை பதிவிட்டுள்ள ஆட்சியர், டாஸ்மாக் ஊழியர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ், மாற்றப்பட்ட பின் வழங்கப்பட்ட சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்