“உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருப்பேன்” - நாமக்கல்லில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

நாமக்கல்: “உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாகவும், சகோதரன் ஆகவும் என்றும் இருப்பேன்” என்று நாமகக்கல் நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.351.12 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,321 பயனாளிகளுக்கு 303.37 கோடி மதிப்பீட்டிலான
அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "பச்சைமலை, கொல்லிமலை, கபிலமலை, திருச்செங்கோடு மலை, சேர்வராயன் மலை என இயற்கை எழில் சூழ்ந்த மலைகளின் மாவட்டம்தான் இந்த நாமக்கல் மாவட்டம். இது, மலைகளின் மாவட்டம் மட்டுமல்ல, மலையளவு உழைக்கும் மக்கள் நிறைந்த மாவட்டம்.

தங்கள் உழைப்பால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கும், இந்தியா ஒன்றியத்தின் பொருளாதத்திற்கும் வலுசேர்க்கும் மக்கள் நிறைந்த மாவட்டம்தான் நாமக்கல் மாவட்டம். கோழிப் பண்ணைகளை அமைத்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பவர்கள்தான் இந்த நாமக்கல் மக்கள். முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது, தமிழ்நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியில் 90% நாமக்கல்லில் இருந்துதான் உற்பத்தியாகிறது. அதனால் தான் நாமக்கல்லை முட்டை நகரம் என்கிறோம்.

ஆழ்துளை கிணறு அமைக்கும் இயந்திரங்கள், தமிழ்நாட்டிலே இந்த நாமக்கல் மாவட்டத்தில் அதிகம். அதேபோல் நாமக்கல் என்றாலே உடனே நினைவுக்கு வருவது லாரிகள் தான். லாரி இல்லாத வீடே இல்லை, அவ்வளவு ஏன் நாமக்கல் லாரிகள் ஓடாத தமிழ்நாட்டின் வீதிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு சுமார் 60 ஆயிரம் லாரிகள் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே உள்ளன.

அதேபோல் நாமக்கல் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது. நம்முடைய நாமக்கல் கவிஞர் தான். “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்று உரிமை குரலாக ஒலித்தவர்தான் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். அத்தகைய நாமக்கல் கவிஞர் பெயரிலான பத்து மாடி பிரமாண்ட கட்டடத்தில்தான் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகள் இயங்குகிறது. தமிழ்நாட்டையே இயக்கும் தலைமைச் செயலக அலுவலக இருக்கும் கட்டடத்துக்கு பெயர் நாமக்கல் கவிஞர் மாளிகை என்பது பலருக்கும் தெரியும்.

அந்தப் பெயரை வைத்து நாமக்கல் கவிஞருக்கும், நாமக்கல் மக்களுக்கும் பெருமையை தேடித் தந்தவர் நம் தலைவர் கருணாநிதி. 1989-ம் ஆண்டு தலைவர் கருணாநிதி ஆட்சியில்தான் நாமக்கல் கவிஞர் மாளிகை என பெயர் வைத்தார்கள். இன்னும் பல பெருமைகளும், உழைக்கும் மக்களும் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு சார்பிலான இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களை எல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்.

நாம் ஆட்சி அமைத்தபோது கரோனா 2-ம் அலை. வழக்கமான நோய்களுக்குக்கூட சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்ல பயந்த சூழல். அதை ஈடுகட்டும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை நம் முதல்வர் தொடங்கிவைத்தார்கள். இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட மருந்து பெட்டகங்கள் பயனாளிகளிடம் சென்று சேர்ந்துள்ளன. சேலம் மாவட்டத்தில் 1 இலட்சத்து 86 ஆயிரத்து 743 பேர் பயனடைந்துள்ளனர்.

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் மகத்தான திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1,16,000 பேர் பயனடைகின்றனர். இதன்மூலம் அரசுக்கு சுமார் 47 கோடி ரூபாய் செலவாகிறது. தற்போது கூடுதலாக 1 லட்சத்து 4,334 மாணவிகள் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். நாமக்கல்லிலும் ஆயிரக்கணக்கானோர் இத்திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் 88.02 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சித்தம்பூண்டி நேதாஜி மகளிர் சுய உதவிக்குழு, அம்மன் மகளிர் சுயஉதவிக்குழு, சக்தி மகளிர் சுயஉதவிக்குழு இப்படி இங்கு கூடியுள்ள மகளிர் குழுக்களாகிய நீங்களும் கடன் தள்ளுபடி பெற்று புதிய கடன்களை பெற வந்துள்ளீர்கள்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியது, இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48… இப்படி எண்ணற்றத் திட்டங்களை பட்டியலிட்டுக்கொண்டே போக முடியும். இராசிபுரம் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான பட்டு ஏலம் மையம் அமைக்கப்பட்டு இதுவரை 7 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக இந்த மையத்தின் மூலம் பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் கட்ட 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு கால்நடை மருத்தவக் கல்லூரி வளாகத்தில் தினமும் 1 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்க ரூ.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மோகனூர் சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தித் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ராசிபுரத்தில் 1300 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராசிபுரம் அரசு தலைமை மருத்தவமனை மாவட்ட தலைமை மருத்தவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்ப்டடு கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இப்படி நாமக்கல் மாவட்டத்திற்கான பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த சாதனைகள் எல்லாம் கடந்த 18 மாதத்தில் திராவிட மாடல் முதல்வர் தமிழ்நாட்டுக்கு நாமக்கல்லுக்கு கொண்டு வந்த திட்டங்கள். வரும் காலங்கள் இன்னும் எண்ணற்ற பல திட்டங்கள் நாமக்கல்லுக்கு கிடைக்க உள்ளன.

உங்களுக்காக உழைக்க அரசாக இந்த அரசு உள்ளது, நம் முதல்வர் சொல்வதைப் போல் ‘இது அனைவருக்குமான அரசு”. இந்த திராவிட மாடல் அரசால் நாமக்கல் இன்னும் செழுமையாக்கட்டும் என வாழ்த்தி, இந்த நிகழ்ச்சியில் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண முழு முயற்சி மேற்கொள்வேன். நான் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்பதை தாண்டி உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாகவும், உங்கள் சகோதரன் ஆகவும் என்றும் இருப்பேன்" அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்