இந்து சமய அறநிலையத் துறையால்தான் திருக்கோயில்களை பாதுகாக்க முடியும்: அமைச்சர் சேகர்பாபு

By செய்திப்பிரிவு

திருக்கோயில்களை பாதுகாக்க இந்துசமய அறநிலையத்துறையால் தான் முடியும் என தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரூ.100 கோடி அரசு மானியம் அளித்து, 104 எண்ணிக்கையிலான ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழில் மந்திரங்களை ஓதுவதற்கும், தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கும் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் 6 சான்றோர்கள், மடாதிபதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழில் எப்படி குட முழுக்கு நடத்தலாம் என்பதை பரிசீலிக்கின்றனர்.

அது தொடர்பான அறிக்கை கூடியவிரைவில் அரசுக்கு அனுப்பப்பட்டு, அரசாணையாக வந்தபிறகு, அறநிலையத்துறை வெளியிடும். குடமுழுக்கு தமிழில் செய்வது தொடர்பான பயிற்சிப் பள்ளி விரைவில் தொடங்கப்படும்.

அரசின் முயற்சியால் ரூ. 3,964 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தேவையற்றது. திருக்கோயில்களில் விலை மதிப்பற்ற செல்வங்கள், நிலங்கள், கலைப் பொக்கிஷங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறையால் தான் முடியும்.

அறநிலையத்துறையில் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு ஆன்மிக புரட்சியை திமுக ஆட்சி ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி வந்த பிறகு 282 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் உள்ள 62 சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திருடப்பட்ட சிலைகள் மீட்கப்படுவது போல், இருக்கும் சிலைகள் களவு போகாமல் பாதுகாக்கப்படுகின்றன.

இந்துசமய அறநிலையத்துறையை பொறுத்தவரை சொத்துகள் மன்னர்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றை பாதுகாத்திட, முறைப்படுத்திட, அதை தொடர்ந்து நடத்துகின்ற முழு அதிகாரம் அறநிலையத்துறைக்கு தான் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE