அண்ணா சாலையில் கட்டிட இடிப்பின்போது பெண் உயிரிழப்பு: சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை என்ன?

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: கட்டிட இடிபாடுகள் விழுந்து ஒரு பெண் உயிரிழந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், இன்று (ஜன.27) காலை அந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது.

அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரியா என்ற பெண் மீது கட்டிட இடுபாடுகள் விழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கட்டிட இடுபாடுகளுக்குள் சிக்கிய பிரியாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி பிரியா உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கட்டிடத்தை இடிக்கும் பணிகளில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், கட்டிடத்தை இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "முறையான அனுமதி பெற்றுதான் கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. ஆனால், இடிக்கும்போது விதிகளின்படி பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இந்தப் பணி நடைபெற்று வந்துள்ளது.

எனவே, இந்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு பணிகளை தொடங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE