எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய வேட்பாளரின் பெயரை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது: உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் முறையீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அப்போது இபிஎஸ் தரப்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களது தரப்பில் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உங்களது இந்த கோரிக்கை குறித்து தெரிவித்துவிட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அப்போது இபிஎஸ் தரப்பில், இதுதொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வரும் திங்கட்கிழமை மீண்டும் முறையிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE