இந்தி திணிப்புக்கு எதிரான திமுக போராட்டம் தொடரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: ‘இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் எப்போதும் தொடரும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வீழ்ச்சியுற்றுக் கிடந்த தமிழினம் பகுத்தறிவுக் கருத்துகளால் இனமான மொழி உணர்ச்சி பெற்று, வீறுகொண்டு எழுந்த வீரவரலாற்றை ஒவ்வொரு தமிழரும் நினைவுகூரும் நாள்தான் வீரவணக்க நாள்.

தமிழ் காக்கும் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கமான திமுக ஆட்சி அமைந்த பிறகுதான், தாய்த் தமிழ்நாட்டுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழும் ஆங்கிலமும்தான் இங்கு பயிற்று மொழியாக இருக்கும் என்று பேரறிஞர் அண்ணா சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இன்றைக்கு உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வர இந்த இருமொழிக் கொள்கைதான் காரணம்.

ஆட்சி நிர்வாகத்தில் தொடங்கி கல்வி மூலமாகத் திணிப்பது வரை ஒன்றிய பாஜக அரசு இந்தியை திணிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு என்ற வரிசையில், ஒரே மொழியை வைத்து மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்கப் பார்க்கிறார்கள். இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் எப்போதும் தொடரும். தமிழைக் காக்கும் திமுகவின் முயற்சிகள் எப்போதும் நீடிக்கும்.

இந்தி மொழி நாள் கொண்டாடும் ஒன்றிய அரசு மற்ற மாநில மொழிகளின் நாளை கொண்டாடுவது இல்லை. இந்தியை ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக மட்டுமல்ல அதிகாரம் செலுத்தும் மொழியாக பாஜக அரசு உயர்த்திக் கொண்டு இருக்கிறது. இந்தியும், ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கிற நிலையில், ஆங்கிலத்தை மொத்தமாக அகற்றப் பார்க்கிறார்கள். ஆங்கிலத்தை அகற்றுவதன் மூலமாக இந்திக்கு அந்த இடத்தைத் தாரை வார்க்கிறார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சமவாய்ப்பு, சம உரிமை வழங்கி, அந்த மொழிகளை இந்திய நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட முயற்சிகள் எடுக்க வேண்டும்.

தமிழ்மொழி, இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் மொழிக் கொள்கை. இந்தித் திணிப்பை எதிர்ப்பதும் - நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதும் இதனால்தான். பாஜக அரசின் தமிழ் விரோத நடவடிக்கைக்கு ஒரே ஒரு உதாரணம், சமஸ்கிருதத்தை வளர்க்க ரூ.643 கோடி செலவு செய்வார்கள், தமிழுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.23 கோடிக்கும் குறைவு. இவர்கள்தான் தமிழ்ச் சங்கமம் நடத்தி வேடம் போடுகிறார்கள்.

திமுக எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல. ஒருவர் தனது ஆர்வத்தின் காரணமாக எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தோடு திணிக்க நினைத்தால் திமுக ஏற்காது. திராவிட மாடல் ஆட்சி, கடந்த 20 மாத காலத்தில் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாகம் தரை தட்டி நின்றது. இதற்கான தக்க பாடத்தை கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் கற்பித்தார்கள். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அதேபோல் நிச்சயமாக மக்கள் பாடம் கற்பிப்பார்கள். கடமையை நிறைவேற்றுவதன் மூலமாகக் காலத்தின் வாரிசுகளாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், அமைச்சர் சா.மு.நாசர், எம்.பி. ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் சந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்