ரூ.100 கோடி வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு ‘சீல்’ - மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணி எச்சரிக்கை

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ரூ.100 கோடி வரி பாக்கியை வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்து மண்டலம் வாரியாக வரி பாக்கி வைத்துள்ள டாப்-10 நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், துணை மெயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி பேசுகையில், ‘‘சிறப்பு நிதி, பொதுநிதியை கொண்டு தார்சாலைகள், பேவர் பிளாக் சாலைகள் போடுவதற்கு ரூ.55 கோடிக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் கோரிக்கையை ஏற்று பாதாளசாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள ரூ.15 கோடிக்கு ஒப்பந்தங்கள் போடப்படுகிறது. மாநகராட்சியில் உள்ள கடைகள், மார்க்கெட், சைக்கிள் மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வருவாய் இனங்களும் ஏலம்விடப்பட உள்ளன. மாநகராட்சிக்கு வருவாயை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி வருவாயை பெருக்க மண்டலம் வாரியாக டாப்-10 வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுத்து அவர்களிடம் ரூ.100 கோடி வசூல் செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. மதுரையை அழகாக்கவும், மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கவும் மாநகராட்சி பல்வேறு திட்டங்களை திட்டமிட்டுள்ளது’’ என்றார்.

மாநகராட்சியை கலைக்க பாஜக கோஷம்: முன்னதாக மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பேசி முடிந்ததும் திடீரென்று எழுந்து மன்ற மைய அரங்கிற்கு சென்று பேசிய 86வது வார்டு பாஜக கவுன்சிலர் பூமா, ‘மாநகராட்சியை கலையுங்கள், மக்களுக்கு உதவாத மதுரைக்கு மாநகராட்சி அவசியம் இல்லை’ என கோஷமிட்டார். போலீஸார் மன்ற அரங்கில் புகுந்து அவரை வெளியேற்றினர். ஆனால், கூட்டணி கட்சியான பாஜகவிற்கு அதிமுக அவருக்கு ஆரவாக பேசாமல் மவுனம் காத்தனர்.

கவுன்சிலர் பூமா கூறுகையில், ‘‘அன்றாடம் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலார்கள் அதிகம்பேர் என்னோட வார்டில் வசிக்கிறார்கள். அவர்களுக்கான பொதுக்கழிப்பிட அறை இல்லை. 10 ஆண்டுகளாக இதற்காக போராடி வருகிறார்கள். நானும் கவுன்சிலர் ஆனது முதல் மனு கொடுத்து வருகிறேன். எந்த நடவடிக்கையும் இல்லை. பாஜக என்பதால் என்னோட வார்டை புறக்கணிக்கிறார்கள்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE