“மதச்சார்பின்மை மீதான நம்பிக்கையால் கமல்ஹாசன் ஆதரவு” - ஈவிகேஎஸ் இளங்கோவன்

By செய்திப்பிரிவு

சென்னை: "மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கை கொண்ட கமல்ஹாசன் ஆதரவளிப்பார் என்று எனக்குத் தெரியும். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அக்கட்சியின் மூத்த நிர்வாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். திங்கள்கிழமையன்று, ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். அன்றையதினம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதன்கிழமை (ஜன.25) காலை 11.30 மணிக்கு தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வெற்றிக்கு நானும், எனது கட்சியும் வேண்டிய உதவிகளை செய்வோம். வாக்காளர்கள் அனைவரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கை கொண்ட கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு நான் எதிர்பார்த்தது. அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

கமல்ஹாசன் ஆதரவளிப்பார் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், இயற்கையிலேயே அவர் மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கை கொண்டவர். எனவே, கண்டிப்பாக திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவளிப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். அதையே அவரும் செய்திருக்கின்றார். அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE