சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்ய ஏற்பாடு: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சுற்றுலா மற்றும் சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் பணி முறைப்படுத்துதல் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் தொடர்பான ஆலோசனைக் குழுகூட்டம், சென்னை தேனாம்பேட்டை, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூடத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்என்பது, உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டத்தின் அட்டவணையில் சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதிதாக 12 லட்சம் தொழிலாளர்கள் அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு செய்துள்ளனர்.

இன்றைய ஆலோசனைக் குழு கூட்டத்தில், கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக நிதி உதவி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பணியிட பாதுகாப்பு பயிற்சி போன்ற திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களின் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி நலத்திட்ட உதவித்தொகையை ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தவும், பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு நல உதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வாரியத்தில் பதிவுபெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமான ஆட்டோவாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கவும், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கும் இக்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வாரியங்களில் பதிவுசெய்த தொழிலாளர்களுக்காக சேவை செயலி அறிமுகப்படுத்தவும், தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கவும் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், குழு உறுப்பினர்களான சட்டப்பேரவை உறுப்பினர்கள் இ.கருணாநிதி, கே.எஸ்.சரவணகுமார், எம்.பன்னீர்செல்வம், தொழிலாளர் துறை செயலர் முகமது நசிமுத்தீன், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வே.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE