திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவகாரம்: போராட்டம் தொடரும் என விவசாயிகள் தகவல்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவகாரம் தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற முத்தரப்புக் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாததால், விவசாயிகளின் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், அப்பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் கரும்பு வழங்கியதற்கான தொகையை வழங்க வேண்டும்.

விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் ஆலை நிர்வாகம் வாங்கிய கடனை தள்ளுபடி செய்து, அவர்களை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுபட வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 56 நாட்களாக ஆலை முன்பு பல கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதிய ஆலை நிர்வாகம், மாவட்ட ஆட்சியர், விவசாயிகள் அடங்கிய முத்தரப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தில் முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், எனவே, போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து முத்தரப்புக் கூட்டத்தில் பங்கேற்ற சுவாமிமலை சுந்தர.விமல்நாதன் செய்தியாளர்களிடம் கூறியது: முத்தரப்புக் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாரும் பங்கேற்கவில்லை. தற்போது சர்க்கரை ஆலையை வாங்கியுள்ள தனியார் நிறுவனத்துக்கு ஆதரவான விவசாயிகள், ஆலையின் நிர்வாகிகள் தான் பங்கேற்றனர்.

கூட்டத்தில், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், விவசாயிகள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே கூறியிருந்தோம். அந்தக் குழுவில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாரும் இடம்பெறவில்லை. எனவே அந்தக் குழுவை திருத்தி அமைக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.

மேலும், விவசாயிகள் பெயரில் எந்தெந்த வங்கிகளில் கடன் வாங்கப்பட்டுள்ளது என்ற முழு விவரம் மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை. வங்கியாளர்களும் முழுமையாக பங்கேற்கவில்லை. இந்த கோரிக்கைகளை முன்வைத்தபோது, அதை யாரும் ஏற்கவில்லை. எனவே கூட்டத்தில் எந்த முடிவும் எட்டவில்லை என்றார்.

இது குறித்து போராட்டக்குழுவில் இடம்பெற்றுள்ள விவசாயி சரபோஜி கூறும்போது, ‘‘எங்களது எந்தக் கோரிக்கைக்கும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே போராட்டம் தொடரும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE