பிப்.10-க்குள் எழுத்துபூர்வ விளக்கமளிக்க மருத்துவர் ஷர்மிகாவுக்கு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவக் குறிப்புகளை தெரிவித்த விவகாரம் தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் விசாரணைக்கு ஆஜராகியிருந்த மருத்துவர் ஷர்மிகாவிடம் வரும் பிப்ரவரி 10-ம் தேதிக்குள் எழுத்துபூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக சித்த மருத்துவ இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஷர்மிகா,சித்த மருத்துவக் குறிப்பில் இல்லாதவற்றை பேசி வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை நோட்டீஸ் அனுப்பியது. இதன்படி, மருத்துவர் ஷர்மிகா இன்று (ஜன.24) அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் உள்ள இயக்குனரக அலுவலகத்தில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு ஆஜர் ஆகி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விசாரணைக்குப் பின்னர் சித்த மருத்துவ இயக்குநர் கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "சித்த மருத்துவ கவுன்சில் அழைப்பாணையை ஏற்று, இன்று ஷர்மிகா விசாரணைக்கு வந்திருந்தார். அவர் மீது பலர் புகாா் அளித்திருந்தனர். ஷர்மிகாவிடம் அந்த புகார்களின் நகல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகார்கள் அனைத்தையும் படித்து பார்த்துவிட்டு, எழுத்துபூர்வமாக தனது விளக்கத்தை அளிப்பதாக கூறியிருக்கிறார். வரும் பிப்ரவரி 10-ம் தேதிக்குள் இதற்கான விளக்கங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அந்த விளக்கத்தின் அடிப்படையில், நிபுணர் குழு பரிந்துரையின்படி இறுதி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அப்போது மருத்துவர் ஷர்மிகா மீது என்ன மாதிரியான புகார்கள் அளிக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நுங்கு சாப்பிட்டால் உடல் பாகங்கள் பெரிதாகும் என்று கூறியதாகவும், குப்புறப்படுத்து தூங்கினால் கேன்சர் வரும் என்றெல்லாம் அவர் கூறியதாக புகார்களில் கூறப்பட்டிருந்தன. எனவே அவர் மீதான புகார்கள் குறித்த நகல்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது விளக்கத்திற்குப் பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது ஆரம்பக்கட்ட விசாரணைதான். சித்தா கவுன்சிலில் பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் விசாரணை மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும்.

முன்னதாக, சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா, சமூக வலைதளங்களில் சித்த மருத்துவக் குறிப்புகளை தெரிவித்து வந்தார். சமீபத்தில் அவர் அளித்த சில குறிப்புகள், சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக, ஒரு ‘குளோப் ஜாமூன்’ சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும். குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும். தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும்’ போன்றவற்றை மருத்துவக் குறிப்புகள் என்ற பெயரில் அவர் தெரிவித்தார். இவை சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE