21 தீவுகளுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருதாளர்கள் பெயர்: ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: “21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டியது தீர நெஞ்சங்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மரியாதை” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி, அந்தமான் நிகோபாரின் 21 தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டியுள்ளார். சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள், பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி நேதாஜியின்126-வது பிறந்தநாள் நேற்று பராக்கிரம தினமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அந்தமான்-நிகோபாரில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார். இதன்படி அந்த தீவுகளுக்கு ஜதுநாத் சிங், ராம் ரகோபா ராணே, கரம் சிங், சோம்நாத் சர்மா, ஜோகிந்தர் சிங்,தன்சிங் தாபா, குர்பச்சான் சிங், பிருசிங், ஆல்பர்ட், ஆர்திசிர், அப்துல் ஹமீது, ஷிதான் சிங், ராமசாமி பரமேஸ்வரன், நிர்மல்ஜித் சிங், அருண்,ஹோஷியார் சிங், மனோஜ் பாண்டே,விக்ரம் பத்ரா, பணா சிங், யோகேந்திர சிங், சஞ்சய் குமார் ஆகியோரது பெயர்கள் சூட்டப்பட்டன.

இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில், "ஆளுநர், அந்தமான் நிகோபாரில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரை சூட்டிய பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியை போற்றினார். இது அந்த தீர நெஞ்சங்களுக்கு பொருத்தமான, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மரியாதை என்று ஆளுநர் குறிப்பிட்டார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE