உதகை தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

உதகை: பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி, உதகை யில் பண்ணை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை தாவரவியல் பூங்கா வளாகத்தில் நேற்று நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் சங்கங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். மோகன்குமார், கருணைராஜ், வாசு, ரமேஷ், பொருளாளர் உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் சட்ட மைய அறங்காவலர் வழக்கறிஞர் விஜயன் கலந்துகொண்டார். தோட்டக்கலைத் துறையில் பணிபுரியும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்கவேண்டும், பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும்.

தோட்டக்கலைத் துறையில் பணிபுரியும் பண்ணை பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்ய வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டு பணிக்காலம் முடிந்தவர்களுக்கு ஓர் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் காலியாக உள்ள மஸ்தூர் மற்றும் அடிப்படை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், மருத்துவப்படி பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தோட்டக்கலைத் துறை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை வரை நிர்வாகம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைவர்சுப்ரமணியின் தலைமையில், தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை பூங்கா மற்றும் பண்ணைபணியாளர்கள் கூட்டமைப்பு, ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE