வாழப்பாடி அரசுப் பள்ளி மாணவி இளம்பிறைக்கு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் சார்பில் விருது

By எஸ்.விஜயகுமார்

சேலம்: பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புப் போட்டியில், மூன்றாம் பரிசு பெற்ற வாழப்பாடி அரசு பள்ளி மாணவிக்கு, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய அளவிலான புதிய அறிவியல் கண்டுபிடிப்புக் கண்காட்சி மற்றும் போட்டி, டெல்லியில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து மாணவ, மாணவிகள் 576 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து, 13 பேர் கலந்து கொண்டனர். இதில், சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த தொழிலாளியான மதியழகன்- சத்திய பிரியா தம்பதியின் இளைய மகள் இளம்பிறை (16) பங்கேற்றார். இவர், வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

மாணவி இளம்பிறை, அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிப்ட் இயந்திரத்தில் விபத்துகளை தடுப்பதற்கான கருவியை உருவாக்கி, அதனை தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் கண்காட்சியில் இடம் பெறச் செய்திருந்தார். இளம்பிறையின் கண்டுபிடிப்புக்கு தேசிய அளவிலான இன்ஸ்பயர் மனாங் விருதும், 3-வது பரிசும் கிடைத்தது.

இதனிடையே, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதற்காக, டெல்லியில் நடைபெற்ற போட்டியில், யேல் பல்கலைக்கழகம் மாணவி இளம்பிறைக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE