புதுவையில் பிரிபெய்ட் மின்கட்டண திட்டம் அமல்படுத்த முடிவு: மாற்றி அமைக்கப்படும் 4.07 லட்சம் மீட்டர்கள்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுவையில் பிரிபெய்ட் மின்கட்டண திட்டம் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுவையில் மின் கணக்கீடு மற்றும் மின் கட்டண வசூலினை மேம்படுத்த அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் பிரிபெய்ட் மின் மீட்டர் பொருத்தப்படும் என்று 2022-2023 பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்‌. அதன் அடிப்படையில், ரூ.251.10 கோடி மதிப்பில் இத்திட்டத்திற்கு மத்திய அரசிடம் திட்ட வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் மத்திய அரசானது 15% மானியமும், டிசம்பர் 2023-க்குள் இத்திட்டம் முடிக்கப்பட்டால் கூடுதலாக 7.5% ஊக்கத்தொகையும் அளிக்கும். இத்திட்டத்தில் மீதி தொகையை, இந்த திட்டத்தினை செயலாக்கும் நிறுவனத்திற்கு மாதம்தோறும் மின் மீட்டர் வாடகையாக, ஒரு மீட்டருக்கு சுமார் 80 ருபாய் என்று 90 மாதங்களுக்கு புதுவை அரசு திருப்பி செலுத்தும்.

நுகர்வோர்களிடம் இதற்காக தனியாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. இத்திட்டத்தில் சுமார் 4.07 லட்சம் ஸ்மார்ட் பிரிபெய்ட் மின் மீட்டர்கள் பொருத்தப்படும். மேலும் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள சுமார் 33,000 ஸ்மார்ட் மீட்டர்களும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு புதுவையில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் பிரிபெய்ட் சிஸ்டம் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டம் தொடர்பாக ஆலோசனைக்காக பொதுத்துறை நிறுவனமான பிஎப்சி கன்சல்டிங் நிறுவனத்துடன் புதுவை மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் அண்மையில் கையெழுத்தானது. ஆனால் புதுவை அரசு பிரிபெய்ட் மின்கட்டண திட்டத்தை அமல்படுத்துவதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE