மதுரை: ஆளுநர் ஆர்.என். ரவி, அரசியல்வாதி போன்று செயல்படுவதை தவிர்க்கவேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில், ‘அரசியலமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும்‘ எனும் தலைப்பில் சட்டத்துறை கருத்தரங்கம் மதுரையில் இன்று நடைபெற்றது. இதற்கு, திமுக சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ எம்பி தலைமை வகித்தார். இதில், பேசிய ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி, "விக்டோரியா மகாராணி ஆட்சி செய்த காலத்தில் அவர்களது ஏஜெண்டுகளாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஆளுநர் நாட்டுக்கு தேவையா என்பது இப்போது புதிது அல்ல. ஆளுநர்கள் நியமிக்கப்பட்டது முதலே இந்த விவாதம் இருக்கிறது. பிரிட்டிஷ் கால நடை முறையை ஏன் தொடரவேண்டும் என பலரும் அப்போதே எதிர்த்துள்ளனர். இதையடுத்தே, ஆளுநர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் முடிவுக்கு அவர் கட்டுப்பட வேண்டும் என்ற வரையறைகளுடன் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். எனவே, ஆளுநர், மாநில அரசின் நிர்வாகத்தையொட்டி செயல்படவேண்டும்" என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திருச்சி சிவா, "தற்போதைய சூழலில் இது போன்ற கருத்தரங்கம் அவசியம். நாடு இக்கட்டான நிலையை சந்திக்கும்போது முன்னணியில் நிற்பவர்கள் வழக்கறிஞர்கள். தமிழ்நாடு ஆளுநரில் அண்மைக்கால செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் இதுபோன்ற நிலை தொடர்கிறது. இது ஏற்புடையதல்ல. அரசியல் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த முடியாத சூழலில் ஆளுநர்கள், மாநில அரசுக்கு எதிராக இதுபோன்று செயல்படுகின்றனர். திமுகவின் வழக்கறிஞர் அணி மட்டுமின்றி மாணவரணி, இளைஞரணி ஆகிய அணிகளும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான கருத்தரங்குகளை நடத்த வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெயரளவுக்கு மாநில கூட்டாட்சி தத்துவம் உள்ளது. நமது அரசியலமைப்பு சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, அன்றைக்கே அண்ணா வலியுறுத்தினார்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி வந்தபிறகு ஏதோ புரட்சி நடப்பது போன்று பரப்புகின்றனர். அவருக்குரிய கடமையை முறையாக செய்யவேண்டும். தேவையற்றதை மக்களிடம் பேசி அவர் குழப்பம் செய்கிறார். கவுரவமிக்க ஆளுநர் பதவியை அவர் காப்பாற்றவேண்டும். அரசியல்வாதி போன்று செயல்படுவதை தவிக்கவேண்டும்.
தமிழ்நாடு சட்டபேரவை கொண்டு வந்த 20 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். மாநில அரசின் முடிவை அவர் தடுப்பது மக்களை அவமதிக்கும் செயல். அமைச்சரவை தயாரித்த உரையிலுள்ள தகவல்களை வாசிக்க தவிர்த்ததால் அவருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். அவர் அண்ணா வழியில் வந்தவர். அப்படிதான் எதிர்வினையாற்றுவார். நாங்கள் தயாரித்த உரை பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு இங்கு வேலையில்லை. தேர்ந்தெடுத்த அரசுக்கு துணை நிற்கவே வந்துள்ளீர்கள்.
சட்டசபையில் ஆளுநர் வெளியேறிய சம்பவம் எல்லா மாநிலங்களிலும் பேசப்படுகிறது. தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற நீங்கள் யார்? ஆளுநரை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கவேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்களிடம் பேசிய ஆளுநர், மத்திய - மாநில அரசுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டால் மத்திய அரசு பக்கமே இருக்கவேண்டும் என அறிவுறுத்துகிறார். இவருக்கு முன் இருந்த ஆளுநர்கள் அமைதியாக சென்றனர். ஆளுநர் ஆர்என். ரவி நிதானமாக செயல்படவேண்டும்." என தெரிவித்தார். அமைச்சர் பி. மூர்த்தி, மாநகர மாவட்ட செயலர் கோ. தளபதி, முன்னாள் மேயர் குழந்தைவேல், முன்னாள் எல்எல்ஏ வேலுச்சாமி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், அரசு வழக்கறிஞர்கள் என, ஏராளமானோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago