சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடர்பாக, இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர்.
வரும் பிப். 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தலைப் பொறுத்து, பாஜக நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இடைத்தேர்தலில் அதிமுக போட்டிடும் என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதேநேரத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் அதிமுக சார்பில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிமுகவுக்கு ஆதரவு கோரி, பழனிசாமி தரப்பைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், டி.ஜெயக்குமார் ஆகியோர் பாஜக மாநில தலைமை அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்று, மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்துப் பேசினர். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
» ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிடுக: விஜயகாந்த்
» ஆளுநரின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பது கண்டனத்திற்குரியது: சிபிஎம்
அப்போது, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாநிலத் துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், மாநிலச் செயலர் கராத்தே தியாகராஜன் உடனிருந்தனர். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் டி.ஜெயக்குமார் கூறும்போது, "இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கோரி பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பாஜக நிலைப்பாடு குறித்து அண்ணாமலை அறிவிப்பார்" என்றார்.
இதற்கிடையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்டோர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர்.
பின்னர், ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மரியாதை நிமித்தமாக பாஜக மாநிலத் தலைவரையும், மூத்த தலைவர்களையும் சந்தித்தோம். அப்போது, மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால், நாங்கள் ஆதரவு அளிப்போம்" என்றார்.
ஜான் பாண்டியன் ஆதரவு: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனை, பழனிசாமி அணியைச் சேர்ந்த செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று சந்தித்தனர்.
பின்னர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளோம். இபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சினையில் நான் தலையிட விரும்பவில்லை. இருவரும் ஒன்றாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். ஓபிஎஸ் என்னை சந்திக்க உள்ளார். அவரிடம் பேசி, இரு தரப்பையும் ஒன்று சேர்க்க முயற்சிப்பேன். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவளிப்போம்" என்றார்.
இதேபோல, தாம்பரத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியை பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர். பின்னர், பூவை ஜெகன்மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, "இடைத்தேர்தலில் எங்களது ஆதரவு பழனிசாமி தரப்பு வேட்பாளருக்குத்தான்" என்றார்.
யாருக்கும் ஆதரவில்லை - பாமக: இடைத்தேர்தல் தொடர்பாக பாமக உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணியுடன் ஆலோசனை நடத்தினர்.
‘‘இடைத்தேர்தல்கள் தேவையற்றவை. பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியைச் சேர்ந்த ஒருவரை பேரவை உறுப்பினராக்கிவிடலாம் என்பதே பாமக நிலைப்பாடு. எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை. மேலும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று இக்கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது" என்று அக்கட்சியின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு கூறும்போது, “தற்போதைய சூழ்நிலையில் பாமக எந்தக் கூட்டணியிலும் இல்லை. பொதுத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 3 மாதங்களுக்கு முன், யாருடன் கூட்டணி அமைப்பது என்று பாமக தலைமை முடிவு செய்யும். அதிமுக உட்கட்சிப் பிரச்சினையில் பாமக தலையிடாது” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago