சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவியின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும், அடாவடித்தனத்திற்கும் பாஜகவினர் ஆதரவு தெரிவிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று சிபிஎம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் சம்பந்தமாக முதலமைச்சரும், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் நடந்து கொண்ட விதத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் மன்னிப்பு கோர வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக கூட்டணி கட்சிகளை வெகுவாக கண்டித்தும், ஆளுநருக்கு ஆதரவு தெரிவித்தும் பேசியுள்ளார்.
அரசியல் சாசன விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதற்காக தமிழ்நாடு ஆளுநரும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் அண்ணாமலையுமே பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டியவர்கள். ஆளுநரின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும், அடாவடித்தனத்திற்கும் பாஜகவினர் ஆதரவு தெரிவிப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
“ஆளுநர் என்பவர் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் நிர்வாகத்திலோ அதிகாரத்திலோ தலையிடும் எந்த அதிகாரமும் இல்லாத ஒருவரே” என்று அண்ணல் அம்பேத்கர் அரசமைப்பு சட்ட அவையிலேயே மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 176ன் படி ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தில் ஆளுநர் சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டும். அதே பிரிவின் பகுதி இரண்டு, ஆளுநர் உரையில் முன்வைக்கப்படும் விசயங்களை சட்டமன்றம் விவாதிக்க வேண்டும் என்கிறது.
» திருப்பதியில் தொடங்கிய ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு
» கடலூர் வந்த மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு அறை ஒதுக்குவதில் பாரபட்சம் என புகார்
இதில் உரை என்று குறிப்பிடுவது முழுமையான உரையே, சுருக்கப்பட்ட உரையோ அதன் பகுதியோ அல்ல. மேலும், ஆளுநர் உரை என்பது அவரின் தனிப்பட்ட உரையும் அல்ல. அரசு நிர்வாகம் தன்னுடைய கொள்கைகளுக்கும், திட்டங்களுக்குமான ஒப்புதலை தேர்ந்தெடுக்கப்பட்ட அவையிடம் கோருகிறது. இதுவே ஆளுநர் உரையாகும். அதே இரண்டாம் பிரிவில் இந்த உரை சட்டமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு இறுதி செய்யப்பட வேண்டுமெனவும் கூறுகிறது.
அப்படியிருக்கும் போது தமிழ்நாடு அமைச்சரவை தயாரித்துக் கொடுத்த உரையை ஏற்கனவே ஏற்றுக் கொள்வதாக கையெழுத்திட்டுவிட்டு பின்னர் சட்டப்பேரவையில் முழுமையாக வாசிக்காமலும், சில வாக்கியங்களை மாற்றியும், திருத்தியும், தமிழ்நாடு என்ற பெயரை உச்சரிக்காமலும், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கருணாநிதி ஆகியோரின் பெயர்களை ஆளுநர் தவிர்த்தது அரசியல் சாசனத்திற்கு விடப்பட்ட சவால் என்பதே அண்ணாமலைக்கும், அவரது கட்சியின் செயற்குழுவிற்கும் தெரியவில்லையா? பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இவ்வாறு செயல்பட்டால் அண்ணாமலையும், அவரது கட்சியும் ஆளுநருக்கு ஆதரவு தெரிவிப்பார்களா?. ஆளுநர்களும் அப்பதவியில் நீடிக்க முடியுமா?.
தமிழ்நாடா, தமிழகமா என்ற சர்ச்சையை ஆளுநர் கிளப்புவது அண்ணாமலை கருதுவதைப் போல மேலோட்டமான பிரச்சினையல்ல. ஆர்எஸ்எஸ்-ன். “ஒரே நாடு, ஒரே மொழி” என்ற தத்துவத்தின் வெளிப்பாடாகும். கடுமையான கண்டனங்கள் எழுந்த பிறகு ஆளுநர் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளுநர் தள்ளப்பட்டுள்ளார் என்பதே உண்மை. அந்த விளக்கம் கூட ஏற்புடையதல்ல.
அதாவது, கடந்த காலத்தில் தமிழ்நாடு என்று இல்லாத காரணத்தால் தமிழகம் என சொன்னதாக கூறியுள்ளார். மேலும், தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ளார். அவர் பேசியது தவறு இல்லையாம். புரிந்து கொண்டவர்களது தவறு என சொல்லாமல் சொல்லியுள்ளார். சங்க காலத்தில் தமிழ்நாடு என்ற பெயர் இருந்ததற்கான ஆதாரங்களை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் அந்த காலத்தில் தமிழ்நாடு என்ற பெயரில்லை என ஆளுநர் யாரிடம் பாடம் படித்தார் என்பது தெரியவில்லை. இவ்வாறு கூறும் ஆளுநர், சட்டமன்ற உரையின் போது தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்ததற்கான காரணத்தை அண்ணாமலை விளக்குவாரா?.
தமிழ்நாடு எனும் பெயர் நாடாளுமன்றத்தால் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சென்னை மாகாணத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. உலக அளவில் உள்ள ஆவணங்களிலும் ஒன்றிய அரசின் ஆவணங்களிலும் தமிழ்நாடு என்ற பெயரே இடம்பெற்று வருகிறது. இதையெல்லாம் அறியாதவர் அல்ல ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ஆளுநர் ஆர்.என். ரவி. இதுமட்டுமின்றி இந்த ஆண்டு பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு மாறாக, தமிழக ஆளுநர் என அச்சிட்டதோடு, தமிழ்நாடு அரசின் இலச்சினையை அச்சிடாமல், ஒன்றிய அரசின் இலச்சினையை அச்சிட்டதற்கும் என்ன நோக்கம் என்பதை அண்ணாமலை விளக்குவாரா?.
ஆளுநர் அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக, சட்டப்பேரவையில் நடந்து கொண்டுள்ள சூழ்நிலையில், சட்டப்பேரவையின் மாண்பையும், அரசியல் சாசன விதிகளையும், கூட்டாட்சி கோட்பாட்டையும் பாதுகாக்கும் நோக்கோடு முதலமைச்சர் சட்டப்பேரவை விதி எண் 17ஐ தளர்த்தி ஆளுநர் உரையின் தவறுகளை திருத்தி, சட்டப்பேரவை ஆவணங்களில் அமைச்சரவையின் அறிக்கையை பதிவேற்றம் செய்ய தீர்மானத்தை முன்மொழிந்தது மிகுந்த பாராட்டுக்குரியது. முதலமைச்சரின் அரசியல் நிபுணத்துவ நடவடிக்கையினை நாடே பாராட்டும் போது அண்ணாமலைக்கு மட்டும் தவறாகப்படுவது அவரது அரசியல் அறியாமையின் வெளிப்பாடே தவிர வேறெல்ல.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே அவையை விட்டு ஆளுநர் வெளிநடப்பு செய்தது தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமின்றி அவையின் உரிமை மீறிய செயலாகும். இச்செயலை அண்ணாமலையும், அவரது கட்சியும் கண்டிக்க துப்பில்லாமல் முதலமைச்சரையும், எதிர்கட்சிகளையும் வசைபாடுவது வெட்கக் கேடானது.
தற்போது குடியரசு தின விழாவிற்கான அழைப்பிதழில் ஆளுநர் முறைப்படி தமிழ்நாடு ஆளுநர் எனவும், தமிழ்நாடு அரசின் இலச்சினையும் அச்சிட்டு அனுப்பியுள்ளார். ஏற்கெனவே தான் செய்த தவறை ஆளுநரே ஒப்புக்கொண்டிருக்கும் போது அண்ணாமலை மட்டும் குதியாட்டம் போடுவது ஏன். தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்கு விலக்கு, ஆன்லைன் ரம்மி தடை உள்ளிட்ட 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியால் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் ஆன்லைன் ரம்மி நிறுவன பிரதிநிதிகளை சந்தித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்திய அரசமைப்பின் பிரிவு 200, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தரலாம், ஒப்புதல் தராமல் மறுக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம் என்கிறது. அதன் பொருள் கால வரையறையற்று அதன்மீது முடிவெடுக்காமல் இருக்கலாம் என்பதல்ல. இதற்கு மாறாக சட்டமன்ற மாண்பை சீர்குலைக்கும் வகையில் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவது மக்களாட்சி தத்துவத்தை காலில் போட்டு மிதிக்கும் நடவடிக்கையாகும்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைச் சார்ந்தவர் என்பதால் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு அண்ணாமலையும், அவரது கட்சியும் வக்காலத்து வாங்குவது தமிழ்நாட்டு மக்களை இழிவு செய்யும் நடவடிக்கையாகும். இத்தகைய இழி செயலை புரிந்து வரும் அண்ணாமலையை ஒருபோதும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago