புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக 83 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் - அமைச்சர் மெய்யநாதன் தகவல்

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக 83 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் சூரன்விடுதியில் இன்று (ஜன.21) அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து பேசியது: "புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 87 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக 83 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. இதன்மூலம் 171 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படவுள்ளன.

இதன்மூலம் இப்பகுதி விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறலாம். விவசாயிகளின் நெல்லை சேமித்து வைப்பதற்காக அறந்தாங்கி அருகே அழியாநிலையில் 40 ஆயிரம் டன் கொள்ளளவில் கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிடங்கு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 3.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE