விளையாட்டு உள்கட்டமைப்புகள் மேம்பாடு: தமிழகம் - ஒடிசா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

By செய்திப்பிரிவு

சென்னை: விளையாட்டு உள்கட்டமைப்புகள் மேம்படுத்துவது தொடர்பாக தமிழகம் - ஒடிசா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒடிசா மாநில விளையாட்டு த்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (ஜன.20) கையெழுத்தானது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "15-வது ஹாக்கி உலக கோப்பை போட்டிகளை காணவும், அம்மாநில விளையாட்டு கட்டமைப்புகளை பார்வையிடவும் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் விளையாட்டு மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தமானது,இளம் திறமையாளர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு விஞ்ஞானிகள் ஆகியோரின் திறமைகளை பரிமாறிக்கொள்ள உதவும். இது இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உள் கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும் , மேம்படுத்துவதற்கும் வழி வகுக்கும்.

இதனால்,உலக தரம் வாய்ந்த வகையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், சர்வதேச விளையாட்டு அகாடமிகள் , விளையாட்டு கல்வி கூடங்கள், சிறப்பு மையங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பிற நவீன வசதிகளை உருவாக்கிடவும் , உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிடவும், சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்திடவும் இரு மாநிலங்களும் முறையான ஒத்துழைப்பு வழங்கும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE