ஏப்.14-ல் அண்ணாமலை நடைபயணம் தொடக்கம் - திருச்செந்தூரில் இருந்து தொடங்க திட்டம்

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: ஆளுநர் விவகாரத்தில் மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடலூரில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபயணம் தொடங்க இருப்பதாக கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலச் செயலாளர் பி.செல்வம், பொருளாளர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்: உலகின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் நாடாக இந்தியாவை உருவாக்கி பெருமை சேர்த்ததற்கும், காசி தமிழ்ச் சங்கமம் நடத்தியதற்கும் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

திமுகவின் மொழி அரசியல்: அரசியல் சாசன வரம்பை மீறி, ஆளுநருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நடந்த அராஜகத்தை கண்டிக்கிறோம். ‘தமிழ்நாடு’ என்பதைவிட ‘தமிழகம்’ என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று ஒரு விழாவில் ஆளுநர் பேசியதை திசைதிருப்பி, மொழி அரசியலை முன்னெடுத்து ஆளுநரை அவதூறு செய்ததையும் செயற்குழு கண்டிக்கிறது. தொடர்ந்து திட்டமிட்டு, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக பேச்சாளர் மூலம் ஆளுநரை தரக்குறைவாக விமர்சித்ததோடு. ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததையும், ‘சட்டப்பேரவையில் கொலை நடந்தாலும் வழக்கு இல்லை’ என்று கூறி, பேரவையின் கண்ணியத்தை குலைத்து, ஆளுநரை தரம் தாழ்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதியை இன்னும் கைது செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டிக்கிறோம்.

ஒருமையில் பேசுவதா?: தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக செயற்குழு வலியுறுத்துகிறது.
‘தமிழகம்’, ‘தமிழ்நாடு’ என்ற விவகாரத்தை பெரிதாக்கி, மொழி ரீதியான பதற்றத்தை உருவாக்க முனைந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். ராமர் பாலம் பாதிக்கப்படாமல், சேது கால்வாய் திட்டம் அமைக்கப்பட வேண்டும். தமிழக விவசாயிகள், நெசவாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தவும் தீர்மானிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு தமிழக திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு, அவற்றை ஒன்றியம், பகுதி வாரியாக விளக்க தமிழக பாஜக தலைவர் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்செந்தூரில் பயணம்: தொடர்ந்து மாலையில் இக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘‘பிரதமர் மோடியின் நலத் திட்டங்கள் மற்றும் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ குறித்து மக்களிடம் எடுத்துக்கூறும் விதத்தில் ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபயணம் தொடங்க இருக்கிறேன். இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

இதுபற்றி பாஜக வட்டாரங்களில் கேட்டபோது, ‘‘தமிழக அரசின் ஊழலை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையிலும் அண்ணாமலையின் நடைபயணம் அமையும். ஏப்.14-ம்
தேதி சித்திரை முதல் நாளில் அவரது பயணத்தை தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது’’ என்றனர். திருச்செந்தூரில் அவர் பயணத்தை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. கடலூரில் நேற்று நடந்த பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசும் கட்சித் தலைவர் அண்ணாமலை. அருகில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE