நெல் கொள்முதல் பணியில் பெண் பணியாளர்கள்: முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நியமனம்

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முதன்முறையாக பெண்களும் கொள்முதல் பணியில் ஈடுபட உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 வட்டங்களில் 2 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட பருவகால நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், பணியாளர்கள் பற்றாக்குறை, இயல்பைவிட அதிகம் பெய்த மழையால் கடந்த ஆண்டு நெல் கொள்முதல் பணியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு பணியாளர் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கவனிக்க வேண்டிய நிலையும் இருந்தது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் நிகழாண்டில் புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 94 பட்டியல் எழுத்தர்கள், 160 உதவியாளர் மற்றும் 109 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், காவலர்களைத் மற்ற பணியிடங்களில் 3 பெண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம்நிகழாண்டில் இருந்து நேரடிநெல் கொள்முதல் பணியில் பெண்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் நிகழாண்டு முதல்கட்டமாக 36 மையங்களைத் திறக்க உத்தரவிட்டுள்ள நிலையில், தேவைக்கேற்ப இதன் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும் என்றும், இம்மாதம் 80 இடங்களில் நெல் கொள்முதல் செய்யதிட்டமிட்டுள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலர்கள், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவை அறுவடைக்கு தயாராக உள்ளது.

விவசாயிகளிடம் இருந்து அரசு நிர்ணயித்த விலைக்கு கொள்முதல் செய்வதற்காக அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 94 பருவகால பட்டியல் எழுத்தர்கள், 160 உதவியாளர்கள் மற்றும் 109 காவலர்கள் என மொத்தம் 363 பருவகால பணியாளர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், பட்டியல் எழுத்தர்கள் 42, உதவியாளர்கள் 68 என மொத்தம் 110 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், முதல்கட்டமாக கடந்த வாரம் 36 மையங்களை திறப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மொத்தம் குறைந்தது 80 மையங்கள் திறக்கப்படும். முதல் முறையாக நேரடி நெல் கொள்முதல் பணியில் பெண்களும் ஈடுபட உள்ளனர். அவர்களுக்குத் தேவையான பணி பாதுகாப்பு, மையங்களுக்குத் தேவையான தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE