சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 27 ஆம் தேதி முடிவை அறிவிப்பேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக போட்டியிடுவது குறித்து நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.20 ) ஈரோடு கிழக்கு தொகுதி நிர்வாகிகளுடன் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த முறை இடைத்தேர்தலில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நிர்வாகிகள் உள்ளனர். தொண்டர்களும் அப்படி தான் உள்ளனர். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதற்காக சில நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். 27 ஆம் தேதி நல்ல செய்தியை அறிவிக்கிறோம். திமுக வீழ்த்த வேண்டும் என்று உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில் அமமுக போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இரட்டை இலை சின்னம் இருந்ததாலேயே எதிர்க்கட்சி அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைத்தது" இவ்வாறு அவர் கூறினார்.