கரும்பு நிலுவைத் தொகை | கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து விவசாயிகள் முற்றுகை

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: புதிய ஆலை அதிபர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் உடனடியாக, கரும்பு விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து விவசாயிகள் முற்றுகையிட்டதால் கோட்டாட்சியர் இருக்கையைவிட்டு எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தலைமை வகித்தார். வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு, தமிழக அரசைக் கண்டிக்கும் வகையில் கருப்புத் துண்டு அணிந்து வந்திருந்த விவசாயிகள், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினையும், வங்கியில் வாங்கிய கடனை ஏற்றுக்கொண்டு, அக்கடன்களை ஆலை நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்கின்றோம் என எழுத்துபூர்வமாக எழுதித் தர வேண்டும்.

கடந்த மாதம் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்படாத நிலையில், ஆலை நிர்வாகத்திற்கு சாதகமாக, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை ஏமாற்றி முடிவெடுத்துள்ளார்கள். எனவே, விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோட்டாட்சியர் மேஜை முன்பு கண்டன முழக்கமிட்டனர். இதற்கு பதிலளித்த கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா, உங்களது கோரிக்கையை மேலிடத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து உத்தரவு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விவசாயிகள், ''மாவட்ட நிர்வாகம், ஆலை அதிபர்களை கைது செய்யத் தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை. எனவே, அவர்களையும், அப்போதிருந்த மாவட்ட ஆட்சியர்களையும் கைது செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகமும், புதிய ஆலை நிர்வாகமும், விவசாயிகளுக்கு விரோதமாகச் செயல்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதே போல் தற்போதுள்ள புதிய ஆலை அதிபர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் உடனடியாக, கரும்பு விவசாயிகளைச் சந்திக்க வேண்டும். இங்கு விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் சட்டத்துறை ஆணையர், கரும்பு பதிவு செய்வதற்காக வழங்கியுள்ள ஆணையை ரத்து செய்ய வேண்டும். இந்த ஆணையை வழங்கியிருப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிப்பதாகும்.

மேலும், தற்போதுள்ள புதிய நிர்வாகம், விவசாயிகளை ஏமாற்றி, மோசடியாக கரும்பு பதிவு செய்வதற்காக கையெழுத்து பெற்று வருகிறார்கள். கையெழுத்திடாத 5 விவசாயிகள் மீது பொய் வழக்குப் பதிந்துள்ளார்கள். இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரிகளை முதலில் கைது செய்ய வேண்டும். விவசாயிகளின் குறைகளைத் தீர்க்காத இக்கூட்டம் தேவையற்றதாகும். இப்போராட்டம் தமிழக முழுவதும் எதிரொலிக்காத வகையில், தமிழக அரசு அந்த ஆலையைக் கையகப்படுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என மேஜையின் அருகில் சென்று முற்றுகையிட்டு முழக்கமிட்டனர், இதனால் திடீரென கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா, கூட்டரங்கத்திலிருந்து எழுந்து சென்றார்.

இதனையடுத்து, சுமார் 10 நிமிடத்திற்கு பிறகு தொடங்கிய இக்கூட்டத்தில், தூர் வாரும் பணியினை முன்கூட்டியே தொடங்க வேண்டும், சம்பா அறுவடை தொடங்கியுள்ள நிலையில் தேவையான அளவில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும், சோதனை அறுவடை முடிந்து 1 வாரத்திற்குள் மகசூல் இழப்பீட்டு விபரங்களை கிராமங்கள் தோறும் அறிவிப்பு செய்ய வேண்டும்.

அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், நெல் மூட்டைகளை 75 கிலோவாக கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் 40 கிலோ கொண்ட 1 மூட்டைக்கு ரூ. 40 லஞ்சமாக பெறப்பட்ட நிலையில், தற்போது 1 மூட்டைக்கு ரூ. 50 லஞ்சமாக பெறுகிறார்கள். இதே போல் 1 மூட்டைக்கு சுமார் 3 கிலோ நெல் திருடுகிறார்கள். தமிழக அரசு நிகழாண்டு 50 லட்சம் ஹெக்டர் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், கொள்முதல் நிலைய அலுவலர்களால் சுமார் ரூ. ஆயிரம் கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரும் கண்டு கொள்வதில்லை. எனவே, விவசாயிகளின் கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்