சென்னை: இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை அரசு மீளமுடியாத கடன்சுமையில் சிக்கியுள்ள நிலையில், அந்த நாடு பன்னாட்டு நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு இந்தியா முழுமையான ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. மனித நேய அடிப்படையில் இந்தியாவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்றாலும் கூட, மனித உரிமைகளை மதிக்காத இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது.
வரலாறு காணாத கடன்வலையில் சிக்கியுள்ள இலங்கை, அதை சமாளிக்க பன்னாட்டு நிதியத்திடம் இருந்து ரூ.23,606 கோடி கடன் வாங்க முடிவு செய்திருக்கிறது. இலங்கைக்கு பன்னாட்டு நிதியம் கடன் வழங்குவதற்கு இந்தியாவின் ஆதரவு தான் முதன்மைக் காரணம் ஆகும். இலங்கைக்கு கடன் வழங்க பன்னாட்டு நிதியம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அவற்றில் முதன்மையானது, இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் ஒன்று, இலங்கையின் கடன் சீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதாகும்.
இலங்கையில் நிலைமையை கருத்தில் கொண்டு, இதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதற்கான உடன்பாட்டிலும் இந்தியா கையெழுத்திடவுள்ளது. அதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரு நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு சென்றுள்ளார்.
இலங்கைக்கு இந்தியா மிக அதிக அளவில் கடன் வழங்கியிருப்பதும், பன்னாட்டு நிதியம் கடன் வழங்க ஆதரவளிப்பதும் முழுக்க முழுக்க மனிதநேய அடிப்படையில் தான் அமைய வேண்டும். அதைக் கடந்து இலங்கைக்கு உதவி செய்ய வேண்டிய எந்த வகையான தார்மிகக் கடமையும் இந்தியாவுக்கு கிடையாது. அதற்கான தகுதியும் இனப்படுகொலை செய்த இலங்கை பேரினவாத அரசுக்கு கிடையாது.
இலங்கைக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் தான் இந்தியா கடனுதவி வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, பன்னாட்டு நிதியத்திடமிருந்து இலங்கை கடன் பெறுவதற்கான உடன்பாடுகளில் கையெழுத்திடுவதற்காகவும் இந்தியா எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இலங்கைக்கு கடன் கிடைப்பதற்காக இந்தியா இந்த அளவுக்கு இறங்கிச் சென்று உதவி செய்ய எந்த நியாயமும் இல்லை.
இலங்கைப் போரின் போது ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசு, அதற்காக இன்று வரை வருந்தவில்லை. இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளை கடந்த காலங்களில் எதிர்கொண்டு வந்த போதும் கூட, தமிழர்களுக்கு எதிரான இனவெறியை கைவிடவில்லை. இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் தொடர்வதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் 2022 பிப்ரவரி மாதம் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிலைமை மோசமடைந்து இருப்பதாக அந்த அறிக்கை கூறியது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்களும், கொடுமைகளும் இன்னும் தொடர்கின்றன. தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்வதும் தொடர்கதையாகிவிட்டது.
இனவெறி கோட்பாட்டை ஒழிக்காதவரை இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகும். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் இனவெறி வன்முறைகளுக்கு முடிவுகட்டாமல், பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு ஏற்படாது. எனவே, இலங்கைக்கு நிபந்தனை இல்லாமல் இந்திய அரசு கடன் வழங்கவோ, கடன் வழங்குவதற்கு ஆதரவளிப்பதோ கூடவே கூடாது.
வடக்கு கிழக்கிலிருந்து ராணுவத்தை குறைத்தல், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், தமிழர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுதல், மீனவர் சிக்கலுக்குத் தீர்வு உள்ளிட்டவை தொடர்பாக இலங்கையிடம் வாக்குறுதிகளைப் பெற்று அதனடிப்படையில் மட்டும் தான் இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டும். இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்திக்கவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக வலியுறுத்தி போதுமான உத்தரவாதங்களை பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
18 hours ago