பழநி கோயில் கும்பாபிஷேகத்தை காண முன்பதிவு தொடங்கியது: குலுக்கல் முறையில் தேர்வாகும் 2000 பேருக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

பழநி: பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்களை அனுமதிக்க குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நேற்று முதல் அதற்கான முன்பதிவு தொடங்கியது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன.27-ம் தேதி காலை 8 முதல் 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது.இதில் பக்தர்கள் கலந்து கொள்ள இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுஉள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2,000 பக்தர்கள் மட்டுமே கும்பாபிஷேகத்துக்கு அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அதற்கான முன்பதிவு நேற்று காலை முதல் தொடங்கியது. பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு ஆகிய 7 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விண்ணப்பிக்கும்போது ஆதார் மட்டுமே அடையாள சான்றாக கேட்கப்பட்டதால் ஆதார் இல்லாதவர்கள் சிரமப்பட்டனர்.

அதேநேரம் ஒரே நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்ததால் சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. பிற்பகலுக்கு பின்பு நிலைமை சரியானது.

இணைய முகவரி

கும்பாபிஷேகத்தை காண விரும்புவோர் www.palanimurugan.hrce.tn.gov.in, www.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களில் ஜன.20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஜன.21-ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2,000 பக்தர்களுக்கு ஜன.22-ம் தேதி மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இலவச அனுமதி சீட்டு

அதன் பின்பு ஜன.23, ஜன.24-ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை தாங்கள் பதிவேற்றம் செய்த அடையாள சான்று நகலுடன் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வேலவன் விடுதியில் இலவச அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம். இந்த அனுமதி சீட்டு ரோப் கார், வின்ச் ரயிலில் செல்வதற்கு பொருந்தாது. படிப்பாதை வழியாக மட்டுமே மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE