பணிக் காலத்தில் உயிரிழந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியரின் மகளுக்கு பணி: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பணிக் காலத்தில் உயிரிழந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியரின் விவாகரத்தான மகளுக்கு, வயது வரம்பை தளர்த்தி கருணை அடிப்படையில் பணி வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் சேலம் மண்டல பொறியாளர் அலுவலகத்தில் காவலராக பணியாற்றிய கோவிந்த முரளி என்பவர், உடல் நலக் குறைவு காரணமாக 2015-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அவருடன் வசித்து வந்த விவாகரத்தான அவரது மகள் தேன்மொழி, கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்கக் கோரி 2016-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் விண்ணபித்த தேதியில், வயது உச்ச வரம்பான 35 வயதை கடந்து விட்டதாக கூறி, அவரது விண்ணப்பத்தை 2017-ல் நிராகரித்து நெடுஞ்சாலைத் துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தேன்மொழி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வயது உச்சவரம்பை தளர்த்தி பணி நியமனம் வழங்க 2018-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குனர் உள்ளிட்டோர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நெடுஞ்சாலை துறை தரப்பில், "கடந்த 2016-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்டப்படி, வயது வரம்பை தளர்த்தி பணி நியமனம் வழங்க முடியாது எனவும், நீதிமன்றமும் அது போல உத்தரவிட முடியாது" என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், "2016-ம் ஆண்டு சட்டம் 2016 செப்டம்பர் முதல் அமலுக்கு வந்த நிலையில், 2016 ஜூன் மாதம் விண்ணப்பித்த தேன்மொழிக்கு முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது. பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு தளர்த்த அனுமதித்து அரசும் உத்தரவுகள் பிறப்பித்துள்ளதாக கூறி, நெடுஞ்சாலைத் துறை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மூன்று மாத காலத்தில் தேன்மொழிக்கு உரிய பணியை வழங்க வேண்டும்" எனவும் நெடுஞ்சாலைத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE