சென்னை: "தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் ஆர்வம் காட்டும் அளவுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்புகளுக்கான யூபிஎஸ்சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளில் அக்கறை காட்டுவதில்லை" என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (18.01.2023) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் அவர் பேசியது: "தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர், இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று உயரிய நிலையை அடைகின்ற நோக்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
முதலாவதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாநிலக் கல்லூரியில் போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி மையம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணமில்லா பயிற்சி மையத்தினை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கும். அலுவலர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
» உணவுச் சுற்றுலா: ஜவ்வாது மலை கருநண்டு ரசம்
» உலக அளவில் ரூ.210 கோடியை எட்டியது விஜய்யின் ‘வாரிசு’ வசூல்
நான் சட்டமன்ற உறுப்பினராக ஆனவுடன் கரோனா காலத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி தந்தவர் நம்முடைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் . தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் பங்கேற்ற 69 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும் மற்றும் 1000 சிறு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது.
இதுவரையில், 1,12,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வருகிற மே மாதத்திற்குள் ஒன்றரை லட்சம் இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் விரைவில் சென்னையில் நடத்தப்படும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 11 தொழில் பயிற்சி நிலையங்கள் (ITI) தொடங்கி உள்ளோம். டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தலா ரூ.30 கோடி மதிப்பீட்டில் அனைத்து தொழில் பயிற்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.2800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் ஆர்வம் காட்டும் அளவுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்புகளுக்கான யூபிஎஸ்சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளில் அக்கறை காட்டுவதில்லை. மத்திய அரசு பணிகளில் 2.1 சதவீதம் நபர்கள் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகின்றனர். ரயில்வே மற்றும் வங்கி போன்ற மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்வதற்கு ஏதுவாக போட்டித் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இந்த மாநிலக் கல்லூரியில் சுமார் ரூ.64 கோடி மதிப்பீட்டில் 2000 நபர்கள் அமரக்கூடிய அளவிலான கலையரங்கம் கட்டப்பட உள்ளது. இந்தக் கல்லூரியில் சிற்றுண்டி உணவகம் (Canteen) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகளை நானே தொடங்கி வைப்பேன். மாணவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளுடன் வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களைத் தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இதுபோன்ற போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார். தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக் கையேட்டினை மாணவ, மாணவியருக்கு வழங்கினார். முன்னதாக, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகக் கண்காட்சியினைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தீன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் கொ.வீரராகவ ராவ், மாநிலக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ராமன் , மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார் , மண்டலக் குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன் , மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஆ.ஜோதிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago