திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார். 131 பேர் காயமடைந்தனர். மேலும், விபத்தில் 2 காளைகள் உயிரிழந்தன.
புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி இன்று காலை அக்கிராமத்தில் பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. தொடர்ந்து கிராம மக்கள் மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு வந்தனர். தொழுவில் இருந்த மாடுகளுக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் மாடுபிடி வீரர்கள் மஞ்சுவிரட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மஞ்சுவிரட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோயில் காளைகள் அவிழ்த்துவிட்டதும் மஞ்சுவிரட்டு தொடங்கியது. காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
தொழுவில் இருந்து 280 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 120 மாடு பிடிவீரர்கள் பங்கற்றனர். மாடுகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக்காசு, பீரோ, கட்டில், அண்டா, குத்துவிளக்கு, மிக்சி, மின்சார அடுப்பு, பட்டுசேலை போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
முன்னதாக சிராயவல் பொட்டல், கம்பனூர் பரணி கண்மாய், கும்மங்குடி பொட்டல் ஆகிய இடங்களில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, காரைக்குடி, திருப்புத்தூர், அறந்தாங்கி திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
மாடு முட்டியதில் மதுரை மாவட்டம் சுக்காம்பட்டியைச் சேர்ந்த பூமிநாதன் (52) உயிரிழந்தார். மேலும் 131 பேர் காயமடைந்தனர். இதில் 31 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர், சிவகங்கை, மதுரை, காரைக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்றவர்கள் மஞ்சுவிரட்டு பொட்டலில் உள்ள மருத்துவ முகாமிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் திருப்பத்தூர் சமத்துவபுரம் அருகே பேருந்து மோதியதில் மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிடப்பட்ட காளை ஒன்று உயிரிழந்தது. அதேபோல் நாச்சியாபுரம் அருகே கிணற்றில் விழுந்து ஒரு காளை உயிரிழந்தது.
கார்த்தி சிதம்பரம் எம்பி, மாங்குடி எம்எல்ஏ, ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, சிவகங்கை எஸ்பி செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வட்டாட்சியர் வெங்கடேசன், ஊர் அம்பலக்காரர் வேலுச்சாமி உட்பட பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். 800-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸாரிடம் நடவடிக்கையால் கடந்த ஆண்டைபோன்று அல்லாமல், இந்த ஆண்டு போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago