சேலம் | தலைவாசல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா வளாகத்தில், தோல் தொழிற்சாலை அமைத்தால் விவசாயிகளுடன் இணைந்து அதிமுக போராடும்: பழனிசாமி

By செய்திப்பிரிவு

சேலம்: ஆசியாவிலேயே மிகப்பெரியதாக அமைக்கப்பட்டுள்ள தலைவாசல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா வளாகத்தில், தோல் தொழிற்சாலை அமைப்பதற்கு முயற்சி மேற்கொண்டால் விவசாயிகளுடன் இணைந்து அதிமுக போராடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்துள்ள சிறுவாச்சூரில், அதிமுக சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கலந்து கொண்டு, பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்தனர். விழாவின்போது கால்நடைகளுக்கு பழனிசாமி உணவளித்தார்.

விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது: பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக, அதிமுக ஆட்சியில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உட்பட ரூ.2,500 மதிப்புடைய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் தரமான வெல்லம் கூட தரப்படவில்லை.

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா தலைவாசலில் அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது, கால்நடைப் பூங்கா வளாகத்தில், தோல் தொழிற்சாலை கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிகிறது. தோல் தொழிற்சாலை வந்துவிட்டால் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கும்.

கள்ளக்குறிச்சி மற்றும் தலைவாசல் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடையும். இந்தப் பகுதிகள் பொன் விளையும் பூமி. இந்த பூமிக்கு நீர் தான் தேவை. தோல் தொழிற்சாலை தேவையில்லை. எனவே, தோல் தொழிற்சாலை அமைக்க முற்பட்டால், விவசாயிகளோடு சேர்ந்து அதிமுக-வும் போராடும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், அதிமுக எம்எல்ஏ.க்கள் நல்லதம்பி, ஜெயசங்கரன், சித்ரா கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE