“சி.எம். போன் நம்பர் என்னிடம் இல்லை. அதான்...” - 'முதலமைச்சரின் முகவரி' திட்ட மையத்துக்கு போன் செய்த பெண்!

By செய்திப்பிரிவு

சென்னை: “சி.எம். போன் நம்பர் என்னிடம் இல்லை என்று கூறி 'முதலமைச்சரின் முகவரி' திட்ட மையத்திற்கு அழைப்பு வந்த நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விவரித்தார்.

தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பதிலுரையில், "கடந்த பத்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச விவசாய மின் இணைப்புகள் 2.20 லட்சம் மட்டுமே. ஆனால், விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு 15 மாத காலத்தில் வழங்கிய இணைப்புகள் 1 இலட்சத்து 50 ஆயிரம். பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, கல்லூரியில் படிக்கும் இளைஞர்களை மட்டுமல்ல. படிக்கவராமல் இடையில் நின்று விடக் கூடியவர்களையும் பள்ளி, கல்லூரிகளுக்குள் அழைத்து வருகிறோம்.

சில வாரங்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த தீபாராணி என்ற ஒரு பெண், 'முதலமைச்சரின் முகவரி' திட்டத்தில் உள்ள சிஎம் ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணில் பேசி இருக்கிறார். பெரும்பாலும் தங்களது தேவைகளை, கோரிக்கைகளை, புகார்களை பதிவு செய்வதற்காகத்தான் அதிலே பலரும் பேசுவார்கள். ‘உங்களுடைய புகார் என்னம்மா?’ என்று கேட்டதும், ‘புகார் சொல்வதற்காக நான் போன் செய்யவில்லை, சி.எம். போன் நம்பர் என்னிடம் இல்லை, சி.எம்.-க்கு நன்றி சொல்வதற்காக போன் செய்தேன்’ என்று தீபாராணி என்ற அந்தப் பெண்மணி சொல்லி இருக்கிறார்.

அவர் சொல்கிறார் - ''நான் காய்கறி வியாபாரம் செய்கிறேன். அதனால என் பிள்ளைக்கு காலையில சாப்பாடு கொடுக்க முடியாது. என் மகன் ஐந்தாவது படிக்கிறான். காலை உணவுத் திட்டத்தின் மூலமாக அவனுக்கு தினமும் காலை உணவு கிடைத்து விடுகிறது, அது தரமானதாக இருக்கிறது. அதுனால சிஎம்க்கு நன்றி சொல்லணும்" என்று அந்தத் தாய் நெகிழ்ச்சியோடு கூறியதுதான் எனக்குக் கிடைத்த பாராட்டு!

இதுபோன்று ஏராளமான எளிய மக்களின் பாராட்டின் காரணமாகத்தான், வாழ்த்துக்களின் காரணமாகத்தான் பெருமை அடைந்து இன்றைக்கு நாங்கள் ஊக்கத்தோடு பணியாற்றுகிறோம். ‘சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ - இது தலைவர் கருணாநிதியின் முழக்கம்! அதோடு, தமிழ் மக்களின் நலன் என்று வந்துவிட்டால், சொல்லாததையும் செய்வோம்; ஏன்? சொல்லாமலும் செய்வோம் - என்பதுதான் எனது முழக்கம்.

மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, 234 தொகுதியிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், நகர்ப்புரச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், புதுமைப் பெண், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல், சமத்துவபுரங்கள் புனரமைப்பு, உழவர் சந்தைகளுக்குப் புத்துயிர் அளித்தல், அரசு முன் மாதிரிப்பள்ளிகள், பத்திரிக்கையாளர் நலவாரியம், எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், இலக்கிய மாமணி விருது, கலைஞர் எழுதுகோல் விருது, பேராசிரியர் அன்பழகனார் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம், பெருந்தலைவர் காமராசர் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு,

பெரியார் - சமூகநீதி நாள் உறுதிமொழி, அம்பேத்கர் - சமத்துவநாள் உறுதிமொழி, வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், அன்னைத் தமிழில் அர்ச்சனை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர், மாவட்டம் தோறும் புத்தகச் சந்தைகள், கோவில் நிலங்கள் மீட்பு, 20 புதிய கலை அறிவியல் கல்லூரிகள், புதிய ஐடிஐ நிறுவனங்கள், காவல் ஆணையம், கல்லூரிக் கனவு, வேலைவாய்ப்பு முகாம்கள், தமிழ்ப் பரப்புரைக் கழகம், தமிழ்நாடு பசுமை இயக்கம்,

சிறுகுறு புத்தாக்க நிறுவனங்கள், பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் சிற்பி திட்டம், போதைப் பொருள் ஒழிப்பு, ஆன்லைன் ரம்மி ஒழிப்பு சட்டம், நீட் தேர்வு விலக்குச் சட்டம், ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம், வழக்கறிஞர் சேமநல நிதி 10 லட்சமாக உயர்வு, நீதிமன்றங்கள் அமைக்க நிலம் ஒதுக்கீடு என்று ஏராளமான திட்டங்களை, சட்டங்களை கடந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். ஒரு சில திட்டங்களைத்தான் நான் சொல்லி இருக்கிறேன். மொத்த திட்டங்களையும் சொல்வதாக இருந்தால் இன்று முழுவதும் நான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய திட்டங்களின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ்நாடும் உயர்ந்திருப்பதை கண்ணுக்கு முன்னால் காண முடிகிறது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்