அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: மரபுகளை மீறாமல் செயல்படுமாறு தமிழக ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் ஆ.ராசா, வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேற்று சந்தித்து, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகார் கடிதத்தை வழங்கினர்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி என்பது மிகவும் உயர்வானது. அரசியல் கருத்துகளுக்கு, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவராக ஆளுநர் இருக்க வேண்டும்.

ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுடன் கருத்தியல், அரசியல் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் மாறானது. தமிழக மக்கள், பண்பாடு, இலக்கியம், அரசியல் போன்ற அனைத்தின் மீதும் ஒரு எதிர் மனப்பாங்கைக் கொண்டுள்ளார்.

பொதுமேடைகளில் தமிழ்ப்பண்பாடு, இலக்கியம் மற்றும்சமூக அமைப்புக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே, சட்டப்பேரவையில் அவர் நடந்து கொண்டவிதம், பேரவை மாண்பை அவமதிக்கும் வகையில் இருந்தது.

ஆளுநர் தனது தனிப்பட்ட அரசியல் கருத்துகளுக்கு ஏற்ப, உரையில் உள்ள கருத்துகளை மாற்றவோ, புதிய கருத்துகளை சேர்க்கவோ கூடாது. ஆனால், அரசியல் சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி, அரசால் தயாரிக்கப்பட்டு, அவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட உரையின் பல பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். எனவே, மக்களாட்சித் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காக்கவும் குடியரசுத் தலைவர் முன்வர வேண்டும்.

அதேபோல, முக்கியமான அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், அவற்றுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது, தமிழக அரசின் செயல்பாட்டு வேகத்தைக் குறைக்கிறது. எனவே, குடியரசுத் தலைவர் இதில் தலையிட்டு, அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி ஆளுநர் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். மரபுகளை மீறாமல், தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களுக்கு ஏற்ற வகையில் பணியாற்றுமாறு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறும்போது, நாங்கள் அளித்த கடிதத்தை படித்துப் பார்த்த குடியரசுத் தலைவர், நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறியதாகத் தெரிவித்தார்.

இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அவர் குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து, நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்குவார் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE