சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் - பழனிசாமி மோதல்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டம்-ஒழுங்கு குறித்து விரிவாகப் பேச அனுமதிக்கவில்லை என்று கூறி, பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தனக்குப் பேச வாய்ப்பு கேட்டார். அவர் பேசுவதற்கு பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதியளித்தார். அப்போது நடைபெற்ற விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது.

பேரவைத் தலைவர் அப்பாவு: சம்பவத்தை குறிப்பிட்டுச் சொல்லுங்கள். பொத்தாம் பொதுவாக, ஆதாரத்தை தராமல் குற்றச்சாட்டு கூறக்கூடாது. சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து பேசினால், நேரம் தருகிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சித் தலைவர் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டதாகக் கூறினார். அவர்களது ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது என்ற பட்டியலை வைத்துள்ளேன். அவர்கள் பேசிய பின்னர், நான் பதில் அளிக்கிறேன். செய்திகளை ஆதாரமாகக் கூற அனுமதிக்கக் கூடாது. சரியான ஆதாரங்களுடன் தரட்டும். நானும் ஆதாரங்களுடன் சேர்த்து பேசுகிறேன்.

அப்பாவு: நேரமில்லா நேரத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு, பேச வேண்டும். பொத்தாம் பொதுவாக பேசக் கூடாது. எனினும், பழனிசாமி தொடர்ந்து ஒரு கருத்தைப் பேச அனுமதி கோரினார்.

பழனிசாமி: தினந்தோறும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் விருகம்பாக்கம் சாலி கிராமத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலர்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்பாவு: நீங்கள் கூறிய சம்பவத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்றத்தில் உள்ள விஷயத்தை இங்கு பேசலாமா?

முதல்வர் ஸ்டாலின்: எதிர்க்கட்சித் தலைவரை பேச விடுங்கள்.

பழனிசாமி: ஆளுங்கட்சியில் இருந்து சிக்னல் வந்தால் பேசஅனுமதிப்பது என்பது வருத்த மளிக்கிறது.

ஸ்டாலின்: பேரவைத் தலைவரை குற்றம்சாட்டி பேசுவது முறையல்ல; வன்மையாகக் கண்டிக்கிறேன். நேரமில்லா நேரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கூறினேன்.

அப்பாவு: அசாதாரண சூழல்இருந்தால், அதுகுறித்து நேரமில்லாநேரத்தில் பேசலாம். அதுதான் ஆரோக்கியமானது. நாட்டுக்கு முக்கியமான விஷயம் பல உள்ளது.

தொடர்ந்து பேரவையில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி கேட்ட நிலையில், அவை உரிமை மீறல் குறித்து பேசுவதற்காக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவை பேரவைத் தலைவர் அழைத்தார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது, அதிமுக உறுப்பினர்களை அமரும்படி பேரவைத் தலைவர் கூறினார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘அவரைப் பேச அனுமதியுங்கள். அதன் பின்னர் நான் பதில் அளிக்கிறேன். நான் ஓடி ஒளியவில்லை. ஆனால், அவைக் குறிப்புக்கு வேண்டாத விஷயங்களைப் பேசினால், அது இடம் பெற வேண்டுமா என்பதை தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

பழனிசாமி: சென்னை விருகம்பாக்கம் சாலி கிராமத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பெண் காவலரிடம் 2 திமுகவினர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கிருந்த திமுக நிர்வாகிகள், காவலரை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளனர். இரண்டு நாட்கள் கழித்துதான் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவலர்களுக்கே இவ்வாறு நடைபெற்றுள்ளது வேதனை அளிக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பேரவைத் தலைவர் பேச அனுமதிக்காத நிலையில், பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

முதல்வர் விளக்கம்

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவருக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த டிச. 31-ம் தேதி இரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பெண் காவலர் புகார் கொடுத்ததும் முதல் தகவல்அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜன. 3-ம் தேதி சம்பவத்தில் ஈடுபட்ட பிரவீன்குமார், ஏகாம்பரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, மறுநாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். புகார் கொடுத்த 72 மணி நேரத்தில் கைது செய்ததுபோல, அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்தது உண்டா? எஸ்.பி. அந்தஸ்தில் இருந்த பெண் அதிகாரிகளை இதுபோன்ற புகாரில் அலைக்கழித்தது அதிமுக ஆட்சிதான். திமுக அரசைப் பொறுத்தவரை, பெண்களுக்கு எதிராக, பெண் காவலர்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

யாராக இருந்தாலும், அரசியல், கட்சி ரீதியாகப் பார்க்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சி திமுக ஆட்சிதான். இவ்வாறு முதல்வர் பதில் அளித்தார். மேலும், அதிமுக ஆட்சியில் நடந்த பல நிகழ்வுகளை பட்டியலிட்டார்.

பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பழனிசாமி தரப்பு உறுப்பினர்கள் அனைவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர்..

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE