தமிழகத்துக்குள் `நீட்' எப்படி நுழைந்தது? - சட்டப்பேரவையில் காரசார விவாதம்

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்: கே.பி.முனுசாமி (அதிமுக): முதல்வராக பழனிசாமி இருந்தபோது, நீட் தேர்வு காரணத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கு செல்ல முடியாது என்ற நிலையை உணர்ந்தவுடன், உள்ஒதுக்கீட்டாக 7.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தார். தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமிதான் முழு காரணம்.

அமைச்சர் பொன்முடி: கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவிடாமல் தடுத்தார். பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வே வரக்கூடாது என்று 2009-ல் சட்டம் போட்டார். தாழ்த்தப்படவர்களுக்கு இடஒதுக்கீட்டை 2 சதவீதம் அதிகரித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: நீட் தேர்வு எப்போது வந்தது என்று நாட்டுக்கே தெரியும். அப்போது மத்தியில் யார் ஆட்சியில் இருந்தார்கள். அவர்களுடன் கூட்டணியில் யார் இருந்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வு 2010-ல் வந்தது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. அவர்களுடன் கூட்டணியில் இருந்தது திமுக.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வுதமிழகத்துக்குள் வரவில்லை. யாருடைய ஆட்சிக் காலத்தில்தமிழகத்துக்குள் நீட் தேர்வு நுழைந்தது என்பதே முக்கியம். நீங்கள் முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழகத்துக்குள் நுழைந்தது.

பழனிசாமி: நீட் தேர்வு கொண்டு வரும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. 2010-ல் நீட் தேர்வு வந்தபோது, காங்கிரஸ் ஆட்சி. அவர்களுடன் கூட்டணி திமுக. அப்போது, திமுகவை சேர்ந்தவர்தான் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தார் என்பதை மறக்க வேண்டாம்.

முதல்வர்: நாங்கள் அமைச்சரவையில் இருந்தபோதுகூட நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. அது எங்களை மீறிதான் வந்தது. எங்களை மீறிதான் நிறைவேற்றப்பட்டது. கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை நீட் தேர்வை தமிழகத்துக்குள் நுழையவிடவில்லை. ஏன் உங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

பழனிசாமி: நீட் தேர்வு தமிழகத்துக்கு வந்ததற்கு காரணம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருக்க முடியுமா?

அமைச்சர் ஐ.பெரியசாமி: தமிழகத்தில் நுழைவுத் தேர்வை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றவர் கருணாநிதி.

பழனிசாமி: நீட் தேர்வை எதிர்த்து நாங்களும் வழக்கு தொடர்ந்தோம். இன்றைக்கும் தமிழகத்தில் நீட் தேர்வு இருக்க கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. தமிழகத்தில் நீட் தேர்வு நுழைந்ததற்கு காங்கிரஸ் - திமுகதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்கள்தான் நீட் தேர்வை தமிழகத்துக்குள் கொண்டு வந்தார்கள்.

முதல்வர்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது நீட் தேர்வுக்கான வரைமுறை கொண்டு வரப்பட்டது. அதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. அதனால்தான் தமிழகத்துக்குள் நீட் தேர்வு நுழைய முடியவில்லை. உங்களுடைய கூட்டணி கட்சியான பாஜக ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது.

கே.பி.முனுசாமி: நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்கள் பாக்கெட்டில் இருக்கிறது. அந்த ரகசியத்தை வெளியே விட்டால் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்துவிடலாம் என்று தேர்தலின்போது சொன்னீர்களே, அது என்ன ஆனது? இவ்வாறு விவாதம் நடந்தது.

கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை நீட் தேர்வை நுழையவிடவில்லை. ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE