மாநகராட்சி பொது சுகாதார துறை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் புகையில்லாமல் போகிப் பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முந்தைய ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகரப் பகுதிகளில் ஏராளமான குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்பட்டு வந்தன. அரசின் பல்வேறு நடவடிக்கையால் போகியன்று குப்பையை எரிப்பது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் இந்த ஆண்டும் புகையில்லா போகி பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தி.நகரில் உள்ள ஆர்.கே.எம்.சாரதா வித்யாலயாமாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்றுப் பேசியதாவது: போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்கள், காகிதம் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, அடர்ந்த புகை மற்றும் நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அனைவரும் போகியன்று தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். தங்கள் வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை எரிக்காமல், வீடு வீடாக வந்து குப்பையைச் சேகரிக்கும் தூய்மைப் பணியாளரிடம் அவற்றை வழங்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 1000 மாணவிகளுக்கு உத்கர்ஷ் தொண்டுநிறுவனம் சார்பில் துணிப் பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா தலைவர் ஆர்.கோவிந்தராஜ், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஜி.தங்கராஜ், பள்ளி தலைமை ஆசிரியை கே.ரமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE